பிடியை இறுக்கும் தேர்தல் ஆணையம்.. உ.பி, குஜராத் உட்பட 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற உத்தரவு
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், உத்தரப் பிரதேசம் உட்பட 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலை போலவே இந்த முறையும், 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கிடையில் தேர்தல் ஆணையம் எதிர்கொள்ளும் 4 சவால்களை பட்டியலிட்டிருக்கிறது.

அதாவது, கடந்த 2017-2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது கைப்பற்றப்பட்ட பணத்தை விட 2022-2023ம் ஆண்டு நடைபெற்ற 11 மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது 835% அதிகமான பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் பண விநியோகம் என்பது மிகப்பெரி பிரச்னை. இரண்டாவது பிரச்னை, ஆள் பலம். பூத் கேப்சர், தேர்தலை முடக்கும் வகையில் பிரிவினை சக்திகளை மேற்கொள்ளும் தாக்குதல் சம்பவங்களை முறியடிப்பது தேர்தல் ஆணையத்திற்கான பிரதான பணியாக இருக்கிறது.
தேசிய எல்லை, மாநில எல்லைகளில் போதுமான அளவு துணை ராணுவப்படைகளை வைத்திருப்பது, செக்போஸ்ட்களை அமைத்து சோதனை நடத்துவது, 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை, போதுமான அளவு ஆயுத கையிருப்பு, ட்ரோன்களை கொண்டு கண்காணிப்பு போன்ற பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இப்படியான பல்வேறு விஷயங்களில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இயங்கி வருகிறது.
இந்நிலையில், உத்தரப் பிரதேசம் உட்பட 6 மாநிலங்களின் உள்துறை செயலாளர்களை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது. அதாவது, குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் உள்துறை செயலாளர்களை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல மேற்கு வங்க மாநிலத்தின் டிஜிபி ராஜீவ் குமாரை மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இது தவிர மீசோரம், இமாச்சலப் பிரதேசத்தின் பொது நிர்வாகத்துறை செயலாளர்களை மாற்ற அதிரடி உத்தரவு பறந்திருக்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்த அளவில் சமீபத்தில் அங்கு சந்தேஷ்காலி பிரச்னை பூதாகரமாக வெடித்து கிளம்பியிருக்கிறது. சந்தேஷ்காலி எனும் பகுதியை, அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த பிரமுகர் ஷாஜகான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த பகுதியில் ரேஷன் பொருட்களை கடத்துவது, நிலங்களை அபகரிப்பது என தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வந்திருந்ததாகவும், இதற்கெல்லாம் உச்சமாக பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் ஷாஜகான் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து சந்தேஷ்காலி பகுதியை சேர்ந்த பெண்கள் போராட்டத்திலும் இறங்கினர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்த தேசிய மகளிர் ஆணையத்தின் நிர்வாகிகள், மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு பரிந்துரைத்தனர். இந்த நிலையில்தான் தற்போது அம்மாநில டிஜிபியை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications