இருப்பை நிரூபிக்க வேண்டுமாம்.. முன்னாள் கடற்படைத் தளபதிக்கு SIR நோட்டீஸ்! ஆக்ஷனில் தேர்தல் ஆணையம்
டெல்லி: இந்தியாவுக்காக நோபல் பரிசு வென்ற, பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் உள்ளிட்டோர் தங்கள் இருப்பை நிரூபிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது பெரும் விவாதமாக வெடித்திருந்தது. இந்நிலையில், இதனை தொடர்ந்து, தற்போது முன்னாள் கடற்படைத் தளபதிக்கும் இதேபோல நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (SIR) தொடர்பாக, ஓய்வு பெற்ற கடற்படைத் தளபதி அட்மிரல் அருண் பிரகாஷுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவாவில் வசிக்கும் இவரிடம், தனது அடையாளத்தை உறுதிப்படுத்த தேர்தல் அதிகாரி முன் ஆஜராகுமாறு வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

என்ன காரணம்?
இது குறித்து, தெற்கு கோவா மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான எக்னா கிளீட்டஸ் கூறுகையில், "அட்மிரல் பிரகாஷின் விவரங்கள் 2002 வாக்காளர் பட்டியலில் இல்லை. அவர் அடையாளம் காண முடியாத பிரிவில் வருகிறார். இதுதான் பெரும்பாலான நிகழ்வுகளில் நடக்கிறது" என கூறியிருக்கிறார்.
சலுகையை கேட்கவில்லை
தேர்தல் ஆணையம் கொடுத்த நோட்டீஸ், சோஷியல் மீடியாக்களில் கடும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நோட்டீஸ் குறித்து, அட்மிரல் பிரகாஷ் தனது X பதிவில், "நான் ஓய்வு பெற்று 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. சிறப்பு சலுகைகளை நான் கேட்கவும் இல்லை. எப்போதும் அவற்றைக் கோரியதும் இல்லை. நானும் என் மனைவியும் SIR படிவங்களை முழுமையாக பூர்த்தி செய்தோம். தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியான கோவா வரைவு வாக்காளர் பட்டியல் 2026-இல் எங்கள் பெயர்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்தோம். இருப்பினும், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு நாங்கள் இணங்குவோம்" என்று பதிவிட்டிருந்தார்.
தளபதி கேள்வி
மற்றொரு பதிவில், அவர் தேர்தல் ஆணையத்தை நோக்கி கேள்வியெழுப்பியிருந்தார். "தேர்தல் ஆணையத்திற்கு நான் ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். SIR படிவங்கள் தேவையான தகவல்களைப் பெறவில்லை என்றால், அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும். BLO எங்களை மூன்று முறை வந்து சந்தித்தார், அப்போது அவர் கூடுதல் தகவல்களைக் கேட்டிருக்கலாம். எனக்கு 82 வயதாகிறது. மனைவிக்கு 78 வயதாகிறது. 18 கி.மீ தூரத்தில் உள்ள இடத்திற்கு சென்று, இருவேறு நாட்களில் ஆஜராகுமாறு எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
என்ன செய்ய வேண்டும்?
அட்மிரல் பிரகாஷ் பதிவுக்கு பதிலளித்த ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல் டி.எஸ். ஆனந்த், "மென்பொருள் பிழைகளே இதற்கு காரணம் என நினைக்கிறேன். நோட்டீஸ் வந்தால் குடிமக்கள் ஆவணங்களைக் காட்டலாம், தவறில்லை. அட்மிரல் அருண் பிரகாஷின் PPO/ஓய்வு பெற்றோர் அட்டை போதுமானது. SIR குழு அவரது வீட்டிற்கே செல்ல வேண்டும்," என்றார்.
முக்கியமான நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுவது இது முதல்முறை கிடையாது. ஏற்கெனவே மேற்கு வங்கத்தில், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞருக்கு, SIR நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications