தினமும் 50 கேள்வி! வீடியோ பதிவு வேற! செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரிப்பது எப்படி? பின்னணி
டெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் 5 நாள் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் எப்படி விசாரணை நடத்த உள்ளனர். எத்தனை கேள்விகள் கேட்க உள்ளனர்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆய்த்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இருப்பினும் இந்த தடையை உச்சநீதிமன்றம் தளர்த்தியது. இதையடுத்து சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இந்த சோதனை ஜூன் மாதம் நடந்தது. இந்த சோதனையின் முடிவில் அவர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது நெஞ்சு வலிப்பதாக அவர் கதறிய நிலையில் அமலாக்கத்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து அவர் கைதும் செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் இதயத்தில் 3 அடைப்பு இருந்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வெடுத்த அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே தான் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமானது. அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என செந்தில் பாலாஜியின் தரப்பில் அவரது மனைவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியின் கைது செல்லும். அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறைக்கு நீதிமன்றமும் பச்சை கொடி காட்டியது. 5 நாட்கள் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க நேற்று அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கஸ்டடியில் எடுத்தனர்.
புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். இந்த வேளையில் செந்தில் பாலாஜி முகத்தில் தாடியுடன், மிகவும் சோகமாக காணப்பட்டார். அவரது முகம் வாடியிருந்தது. இந்நிலையில் தான் இன்று முதல் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியிடம் தீவிர விசாரணை நடத்த உள்ளனர்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்தது தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட உள்ளது. மேலும் இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது. அவர்களுக்கு எந்த வகையில் தொடர்பு உள்ளது. மோசடி பணம் வேறு நிறுவனங்களில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டதா? முதலீடு செய்யப்பட்டால் எந்த வகையில் பணம் கொண்டு செல்லப்பட்டது? என்பது தொடர்பாக விசாரிக்க உள்ளனர்.
மேலும் 12ம் தேதி வரை கஸ்டடியில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் தினமும் 50 கேள்விகள் வீதம் மொத்தம் 250 கேள்விகளை அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியிடம் கேட்க உள்ளனர். மேலும் அவர் கூறும் தகவல்களை வாக்குமூலமாக வீடியோவாகவும், எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்ய அமலாக்கத்துறையினர் முடிவு செய்துள்ளது.
மேலும் அவர் கூறும் இந்த தகவலின் அடிப்படையில் தான் அமலாக்கத்துறையின் அடுத்தக்கட்ட நகர்வு என்பது இருக்கும். அதாவது அவர் கூறும் தகவலின்பேரில் கூடுதலாக விசாரணை நடத்த வேண்டும் என்றால் மீண்டும் அமலாக்கத்துறை அவரது கஸ்டடியை இன்னும் நீட்டிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு செய்யும். இதில் கஸ்டடி வழங்குவது என்பது நீதிமன்ற உத்தரவை பொறுத்து தான் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications