வாயை மூடுங்க! இல்லாவிட்டால் அமலாக்கத்துறை வரும்! லோக்சபாவில் மிரட்டிய மத்திய அமைச்சர்! பரபரப்பு
டெல்லி: டெல்லியில் குடிமை பணி அதிகாரிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த சட்ட திருத்த மசோதா நேற்று நாடாளுமன்ற லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் பேசிய நிலையில், ‛‛அமைதியாக இருங்கள். இல்லாவிட்டால் வீட்டுக்கு அமலாக்கத்துறை வரும்'' என மத்திய பெண் அமைச்சர் மீனாட்சி லேகி மிரட்டல் பாணியில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியியில் ஆம்ஆத்மியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார்.டெல்லி யூனியன் பிரதேசமாகவும், தலைநகராகவும் இருப்பதால் துணை நிலை ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் கூடுதலாக அதிகாரங்கள் உள்ளன.

குறிப்பாக துணை நிலை ஆளுநர் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் குடிமைப்பணி அதிகாரிகள் நியமனம் செய்வதில் மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் இடையே பெரிய பிரச்சனை இருந்தது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஆம்ஆத்மி வழக்கு தொடர்ந்தது. இதில் குடிமைப்பணி அதிகாரிகள் நியமனத்தில் டெல்லிக்கு என்று மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு தான் உரிமை உள்ளதாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நீர்த்து போகச் செய்யும் வகையில் உடனடியாக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்தது.
இதற்கான சட்ட மசோதா நேற்று நாடாளுமன்ற லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. முன்னதாக இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்பட பல கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். அதேபோல் மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் மசேதாவை ஆதரித்து பேசினர்.
இந்த வேளையில் டெல்லி எம்பியும், மத்திய இணை அமைச்சர் (வெளியுறவுத்துறை மற்றும் கலாசாரத்துறை) மீனாட்சி லேகி பேசினார். அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் குறுக்கீட்டனர். இதனால் கோபமடைந்த மீனாட்சி லேகி, ‛‛ஒரு நிமிடம். வாயை மூடி அமைதியாக இருங்கள். இல்லாவிட்டால் உங்கள் வீட்டுக்கு அமலாக்கத்துறை வரும்'' என்றார். இவரது இந்த பேச்சால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையை மத்திய அரசு ஏவி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் அவரது இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. அதோடு அவரது பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஒவ்வொரு கட்சி சார்பிலும் அதன் செய்தி தொடர்பாளர்கள் மத்திய அரசை கண்டித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications