தேர்தல் வழக்கில் டெல்லியில் “மூவ்”.. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் எடப்பாடி பழனிசாமி!
டெல்லி: வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் எடப்பாடி பழனிசாமி விசாரணைக்கு ஒத்துழைக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்ததாக கூறி, அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யும்படி, சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. சேலம் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில், புகார்தாரர் மிலானி எடப்பாடி தொகுதியை சேர்ந்தவரோ, தேர்தலில் போட்டியிட்டவரோ அல்ல எனவும், வேட்பு மனுவில் எந்த தகவலையும் மறைக்கவில்லை எனவும், புகாரே விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில், சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சேலம் மாவட்ட குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் மனு மீதான தீர்ப்பை நீதிபதி வேல்முருகன் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.
இந்த வழக்கில் கடந்த 22 ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி, எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பான புகாரில் காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு வரும் திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications