அமித் ஷாவை சந்திக்க அதிமுக நிர்வாகிகளுக்கு நேரம் மறுப்பா? டெல்லியில் என்ன நடந்தது? மாறும் காட்சிகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிமுக நிர்வாகிகளை சந்திக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் தரவில்லை என்பதால், அவர்கள் டெல்லியில் இருந்து தமிழ்நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக -பாஜக தலைமை இடையே கருத்து வேறுபாடு நிலவும் நிலையில், அதிமுக நிர்வாகிகள் வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கேபி முனுசாமி உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டிருந்தனர்.

Edappadi Palaniswami plan against Annamalai : AIADMK officials will meet Amit Shah shortly

இவர்கள் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்திக்க திட்டமிட்டமிட்டிருந்தனர். அவர்களிடம் அண்ணாமலை குறித்து புகார்கள் தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அதிமுக நிர்வாகிகளை சந்திக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் தரவில்லை என்பதால், அவர்கள் உடனடியாக தமிழ்நாடு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பேரறிஞர் அண்ணா குறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு பாஜக - அதிமுக கூட்டணியில் பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அண்ணாவைப் பற்றி அவதூறு பேசினால் அண்ணாமலையின் நாக்கு துண்டாகிவிடும், நாக்கு அழுகிவிடும் என்று கூறினார்.

இதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசும் போது, அண்ணாமலை தனது போக்கை மாற்றிக்கொள்ளுங்கள் அண்ணாமலை. இனியும் எங்களை வாழவைத்த தலைவர்களை பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ள 'நானும் ரவுடிதான்' என வடிவேல் சொல்வதைப்போல நானும் இருக்கிறேன் என பேசி வருகிறார். அதற்காக எங்கள் தலைவர்களை இழிவுபடுத்த வேண்டாம்.இந்தக் கூட்டணியை முறிக்க வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு அண்ணாமலை செயல்படுகிறார். இதேபோல் தொடர்ந்து அவர் பேசிக்கொண்டிருந்தால், ஒருமுடிவை எடுக்க வேண்டும் என எங்கள் தலைமையை நாங்கள் கண்டிப்பாக வலியுறுத்துவோம் என்றார்.

இதனிடையே ஜெயக்குமார் பேசும் போது, கூட்டணியில் இருந்துகொண்டு கூட்டணி தர்மத்தை மீறி பேசுகின்ற எந்த ஒரு செயலையும், கருத்தையும் தன்மானம் உள்ள அதிமுக தொண்டர்கள் எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டினால், அது திமிர் பிடித்து ஆடுமாம். வீட்டில் உள்ள பண்டபாத்திரங்களை எல்லாம் கொத்துமாம். சிட்டுக்குருவிகளுக்கே உள்ள புத்தி அது.

அரசியல் தலைவருக்கே லாயக்கில்லாத, பாஜக தலைவருக்கே லாயக்கில்லாத, சிறுமைபுத்திக் கொண்ட, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு அண்ணாமலை தொடர்ந்து. அதிமுக என்பது ஒரு சிங்கக் கூட்டம். அதை பார்த்து, சிறு நரி அண்ணாமலை ஊளையிடுகிறது. ஊளையிடும் இந்த சிறு நரி தனியாக சென்று நிற்கட்டும். நோட்டாவுக்கு கீழே அண்ணாமலை வாக்குவாங்குவாரே தவிர, நோட்டாவைத் தாண்டமாட்டார். அப்படியிருக்கிறது அண்ணாமலையின் செல்வாக்கு. பெரியார், அண்ணா குறித்து பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி உள்ளது? அதிமுக பொதுச் செயலாளர்,ஜெயலலிதா, எம்ஜிஆர், குறித்துப் பேச என்ன தகுதி உள்ளது?

எனவே, தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக, கூட்டணிக் கட்சியை விமர்சனம் செய்து முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால், அதை ஒருகாலும் அதிமுக தொண்டன் ஏற்றுக்கொள்ளமாட்டான். அண்ணாமலை குறித்து பாஜக மேலிடத்திலும் புகார் செய்துவிட்டோம். என்டிஏ கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, இவரை திருத்த வேண்டும், இதுபோல அவரை பேச வேண்டாம் என்று கூறிவிட்டோம். கூட்டணியில் இருக்கும்போது அண்ணாமலை இவ்வாறு பேசினால், தேர்தல் நேரத்தில் எப்படி தொண்டர்கள் வேலை செய்வார்கள்? பாஜக தொண்டர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். ஆனால் அண்ணாமலை விரும்பவில்லை.

அவர் விரும்பாத சூழலில், இதுபோன்ற கருத்தைக் கூறி, எங்களுடைய தலைமையிலான கூட்டணியில் இருந்துகொண்டு அண்ணாமலை வைக்கும் விமர்சனங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? பாஜகவினரை சுமக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு என்ன இருக்கிறது? உங்களை யாராவது சுமக்கத்தான் வேண்டும். உங்களுக்கே காலே கிடையாது. அண்ணாமலைக்கு காலே கிடையாது. பாஜக இங்கு கால் ஊன்றவே முடியாது. எந்தளவுக்கு பாஜகவுக்கு வாக்கு வங்கி இருக்கிறது என்பது தெரியும். அதிமுகவை வைத்துதான் உங்களுக்கு அடையாளமே. ஒரு தன்மானமுள்ள தொண்டன் அண்ணாமலையின் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலிடத்திலும் அண்ணாமலை குறித்து புகார் அளித்தாகிவிட்டது. திரும்பத்திரும்ப இதுபோல பேசினால், இனியும் பொறுத்துக்கொள்ளும் நிலையில் இல்லை.

எனவே, பாஜகவுடன் கூட்டணி இல்லை. கூட்டணியைப் பொறுத்தவரையில், பாஜக அதிமுக கூட்டணியில் இல்லை. தேர்தல் வரும்போதுதான் அதுகுறித்து முடிவு செய்யப்படும். அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை.இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. இனிமேல் அண்ணாமலை எங்களது தலைவர்கள் குறித்து விமர்சனம் செய்தால், கடுமையான விமர்சனங்களை சந்திக்க நேரிடும்" என ஜெயக்குமார் எச்சரித்தார்.

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என ஜெயக்குமார் அறிவித்த பின்னர் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். கோவையில் நேற்று பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கூட்டணிக்காக எங்கள் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம். அண்ணா பெயரில் கட்சியை வைத்து உள்ள நாங்கள் எப்படி அண்ணாவை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்வோம் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அண்ணாமலை பக்குவம் இல்லாமல் பேசி வருகிறார். அண்ணா குறித்த வரலாற்றை திரித்து பொதுவெளியில் பேசுவது ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல என்றும் கூறினார்.

இதனிடையே பாஜக மாநில தலைவர் குறித்தும் அதிமுக நிர்வாகிகள் பொதுவெளியில் விவாதிக்க வேண்டாம் என அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த செய்திகளை அதிமுக நிர்வாகிகள் சிலர் மறுத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, எங்கள் கொள்ளை அண்ணாயிசம், எங்களுக்கும் பாஜகவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நட்டா, அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் பிரச்சனை இல்லை. அவர்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மதிக்கிறார்கள். நாங்கள் அண்ணாமலையை மட்டுமே விமர்சிக்கிறோம்" என்றார். செல்லூர் ராஜூவின் இந்த பேச்சின் மூலம் அதிமுக பாஜக கூட்டணியை விட்டு செல்லாது என்பது தெரிவதாகவும், அதேநேரம் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்பதில் அதிமுக தலைமை உறுதியாக உள்ளது தெரிவதாகவும் கூறப்பட்டது.

இதனிடையே செல்லூர் ராஜூபேட்டி அளித்த கொஞ்ச நேரத்திலேயே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் அதிமுக - பாஜக கூட்டணி இருக்கிறதா? இல்லையா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், "என்னைப் பொறுத்தவரைக்கும் அண்ணாமலைக்கும், அதிமுகவுக்கும் பிரச்சினை இருக்கிறதா, இல்லை. தமிழக பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் பிரச்சினை இருக்கிறதா, இல்லை. எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை. இதில் தெளிவாகவும் வெளிப்படையாகவும் நாங்கள் இருக்கிறோம்.

ஆனால் கடந்த 4 நாட்களாக அதிமுக தலைவர்கள் நிறைய பேர் பேசியிருக்காங்க.. அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பிரச்சினை இருப்பது போல எனக்குத் தெரியவில்லை. அதிமுகவில் இருக்கிற சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்சினை இருக்கிறதா என்றால்.. இருக்கலாம். அது எனக்கு தெரியாது. எனக்கு யாருடனும் பிரச்சினை இல்லை.

பாஜகவைப் பொறுத்தவரை, எங்கள் தலைவர் மோடி. மூன்றாவது முறையாக மோடியை முன்னிலைப்படுத்தி இந்தத் தேர்தலுக்கு செல்கிறோம். எங்களுடைய மையப்புள்ளி நரேந்திர மோடி. அவரை யார் எல்லாம் ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்கள் இந்தக் கூட்டணியில் இருக்காங்க. இந்த என்டிஏ கூட்டணியின் மையமே பிரதமர் நரேந்திர மோடிதான். அதை அதிமுகவும் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

இன்றுகூட செல்லூர் ராஜூ, மத்தியில் பிரதமராக மோடியையும், மாநிலத்தில் முதல்வராக எடப்பாடி பழனிசாமியையும் பாஜக அறிவிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதை எப்படி நான் அறிவிப்பேன். எனக்குத் தெரியாது. இதை எங்களுடைய தேசிய தலைவர்கள்தான் சொல்ல வேண்டும். என்னைப் பொறுத்தவரையில், அரசியல் இப்படித்தான் செய்ய வேண்டும் என்பதில் நான் தெளிவாக உள்ளேன்.

நான் யாரையும் தவறாகப் பேசவில்லை. என்னைப் பற்றி வரக்கூடிய விமர்சனங்களுக்குக் கூட நான் பதில் அளிக்கமாட்டேன். ஆனால், என் தன்மானத்தைக் கேள்விக்குறியாக்கும்போது நான் பேசுவேன். தன்மானத்தை விட்டுக்கொடுத்து அரசியல் செய்வதற்காக நான் இங்கு வரவில்லை என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். எனக்கும், தமிழக பாஜகவுக்கும் யாரிடமும் பிரச்சினை இல்லை. எனவே, அதிமுகவினர் கேட்கும் கேள்விகளுக்கு பாஜக தேசிய தலைவர்கள் பதில் அளிப்பார்கள்" என்றார்.

இதனிடையே அண்ணாமலை இப்படி பேசிவருவதற்கு இதுவரை எடப்பாடி நேரடியாக பதில் அளிக்கவில்லை. மற்ற தலைவர்களை வைத்தே பதில் அளித்து வருகிறார். அதேநேரம் மிகவும் கவனமாக கையாண்டு வருகிறாராம். அண்ணாமலையின் நடவடிக்கை குறித்து டெல்லி தலைமையிடம் பல முறை புகாராகச் சொல்லியும் எந்த நடவடிக்கையும் முன்பு எடுக்கப்பட்டது இல்லை. இந்த நிலையில் தான் அதிமுக நிர்வாகிகள் வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் டெல்லி சென்றுள்ளனர். ஏற்கனவே சிவி சண்முகம் டெல்லியின் தான் இருக்கிறார்.

இந்நிலையில் அதிமுக தலைவர்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தச் சந்திப்பின்போது பா.ஜ.க மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனும் உடன் இருப்பார் என தகவல்கள் வெளியாகின. இந்த சந்திப்பின்போது, கூட்டணி குறித்தும், அண்ணாமலை குறித்தும்தான் முழுக்க முழுக்க பேசப்பட உள்ளதாவும் கூறப்பட்டது.

இந்த சூழலில் அதிமுக நிர்வாகிகளை சந்திக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் தரவில்லை என்று டெல்லி வட்டாரங்கள் சொல்கின்றன. இதையடுத்து அவர்கள் டெல்லியில் இருந்து தமிழ்நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக எடப்பாடி உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் டெல்லி மேலிடம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை அறிய எடப்பாடி காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துவார் என்று அதிமுக வட்டாரங்கள் சொல்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+