150 மாவட்ட ஆட்சியர்களை மிரட்டினாரா அமித்ஷா? ஜெய்ராம் ரமேஷின் குற்றச்சாட்டு! தேர்தல் ஆணையர் விளக்கம்
டெல்லி: நாடு முழுவதும் 150 மாவட்ட ஆட்சியர்களை அமித்ஷா மிரட்டியதாக காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்ட நிலையில், ஜெய்ராம் ரமேஷின் ஒருவாரம் அவகாசம் கோரிக்கையை ஆணையம் நிராகரித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றிருக்கிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக மே 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக மே 13ம் தேதியும், 5ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு மே 20ம் தேதியும் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

7 மாநிலங்களில், 58 தொகுதிகளில் மே 25ம் தேதி 6ம் கட்டமாகவும், ஜூன் 1ம் தேதி 7 மாநிலங்களில் 57 தொகுதிகளுக்கு 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது.
இந்த முறை மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் அமர்வாரா? அல்லது இந்தியா கூட்டணி வலுவான போட்டி கொடுத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்துள்ளன. இந்த லோக்சபா தேர்தல் இரண்டு கட்சிகளுக்கும் மிக முக்கியமானதாகும். நாளை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
இப்படி இருக்கையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடு முழுவதும் உள்ள 150 மாவட்ட ஆட்சியர்களை போன் செய்து மிரட்டியதாக காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியிருந்தார்.
அதாவது, "தேர்தல் முடிவுகளில் மாற்றங்களை மேற்கொள்ள ஏதுவாக அமித் ஷா 150 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்துள்ளார். அதோடு மிரட்டலிலும் ஈடுபட்டுள்ளார். அரசு அதிகாரிகள் எவ்வித அழுத்தத்துக்கும் ஆளாகாமல் அரசமைப்பை நிலைநிறுத்த வேண்டும். ஜூன் 4-அம் தேதி மக்களே வெற்றி பெறுவர்" என தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விரிவான ஆதாரங்களையும், தகவல்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.
"மாவட்ட ஆட்சியர்கள்தான் தேர்தலின்போது அந்தந்த மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளாக செயல்படுகின்றனர். எனவே ஜெய்ராம் ரமேஷின் இந்த குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. எந்தவொரு மாவட்ட ஆட்சியரும் தாங்கள் மிரட்டப்படுவதாக இது வரை புகார் தெரிவிக்கவில்லை.
இருப்பினும், ஒரு முக்கிய அரசியல் கட்சியின் மூத்த தலைவர் சுமத்திய குற்றச்சாட்டின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு பொது நலனுக்காக அதற்கான விவரங்களை தருமாறு அவரிடம் கோரப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் செயல்முறை ஒவ்வொரு தேர்தல் அதிகாரியின் புனிதமான கடமையாகும். ஒரு மூத்த, பொறுப்பான மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவரின் இத்தகைய பகிரங்க அறிக்கை தேர்தல் நடைமுறைகளின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்த காரணமாகிவிடும். எனவே, பொது நலனுக்காக அதுதொடர்பான ஐயங்கள் தீர்க்கப்பட வேண்டியது அவசியம். அதற்காகவே ஜெய்ராம் ரமேஷிடம் விவரங்கள் கோரப்பட்டுள்ளது" என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
மேலும், இன்று மாலை 7 மணிக்குள் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரியிருந்தது. ஆனால், ஜெய்ராம் ரமேஷ் ஒரு வார காலம் அவகாசம் கோரியிருந்தார். இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார், ஜெய்ராம் ரமேஷூக்கு இந்த விவகாரம் தொடர்பாக காலக்கெடு வழங்கப்படாது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications