கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்.. மின்னணு வாக்குப்பதிவு முறைதான்.. 55 லட்சம் EVM மெஷின்கள்!
டெல்லி: மக்களவை தேர்தலுக்காக நாடு முழுவதும் 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் 2 தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், எஸ் எஸ் சந்து ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து வருகின்றனர். லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகள் பற்றி தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கி வருகிறார்.

நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். 1.50 கோடி தேர்தல் பணியாளர்கள் இந்தியா முழுவதும் பணியாற்ற உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், 2100 தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்துள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வரும் லோக்சபா தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். கடந்த லோக்சபா தேர்தலை விட 6 சதவீத வாக்காளர்கள் அதிகம் ஆகும். ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 47.1 கோடி பேரும் மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேரும் வாக்களிக்க உள்ளனர். நாடு முழுவதும் 1.82 கோடி முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றன. நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. அரசியல் தலைவர்கள் பலரும் இவிஎம் இயந்திரம் வேண்டாம், வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைத்தனர்.
எனினும், இந்தக் கோரிக்கைகளை எல்லாம் இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. இந்த லோக்சபா தேர்தல் முழுமையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாகவே நடத்தப்படும் என்றும் 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications