டாப்-3ல் தமிழ்நாடு..இதுவரைக்கும் இப்படி கிடையாது! தேர்தல் ஆணையத்தின் பகீர் தகவல்..4650 கோடியாமே..!
டெல்லி: நாட்டின் 75 ஆண்டுகால மக்களவைத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பணம் கைப்பற்றப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுவரை 4650 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது 2019 தேர்தலில் மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்டதை விட அதிகம் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன.

நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்லாமல் அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஒடிசா, ஆந்திர பிரதேசம், ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் 26 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட இருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தல்: தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து இதற்காக மத்திய அரசின் கீழ் செயல்படும் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை மட்டுமல்லாது சுங்கவரித்துறை வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சட்டவிரோத பண பரிமாற்றம், மதுபான கடத்தல், போதை பொருள், கடத்தல் வாக்காளர்களுக்கு பரிசு பொருள் வழங்குவதை தடுப்பது உள்ளிட்டவற்றுக்காக தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
ரூ.4650 கோடி பறிமுதல்: இது மட்டுமல்லாமல் பறக்கும் படைகள் மூலம் இந்தியா முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சட்ட விரோதமாக எடுத்துச் செல்லப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தான் இந்தியாவின் 75 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு நான்காயிரத்து ஐநூறு கோடி ரூபாய்க்கு மேல் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மார்ச் 1ஆம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் 100 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியது.
எவ்வளவு மதிப்பு: இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கும் முன் நாடு முழுவதும் ரூ.4,650 கோடி மதிப்புள்ள மதுபானம், பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், இதில், ரொக்கம், ரூ.395.39 கோடி, மதுபானங்கள் ரூ.489.31 கோடி, போதைப்பொருள்கள் ரூ.2,068.85 கோடி, இலவசப் பொருட்கள் ரூ.1,142.49 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் 3வது இடம்: அதிகபட்சமாக ராஜஸ்தானில் ரூ. 778 கோடியும், இரண்டவாதாக குஜராத் மாநிலத்தில் 605 கோடி மதிப்புள்ள மதுபானம், பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாட்டில் மட்டும் மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை ரூ.460 கோடி மதிப்புள்ள நகை, பணம், மதுபானங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ரொக்கம் ரூ.53 கோடி, போதைப்பொருள்கள் ரூ.293 கோடி, தங்கம், வெள்ளி பொருட்கள் ரூ.78 கோடி, மதுபானங்கள் ரூ.4.4 கோடி, இலவசப் பொருட்கள் ரூ.31 கோடி ஆகும். அந்த வகையில் 3வது இடத்தில் தமிழகம் உள்ளது.
வரலாற்றில் முதன்முறை: கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது நாடு முழுவதும் ரூ.3,475 கோடி பறிமுதலானது. இந்நிலையில் தற்போது ரூ.4,650 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.2,500 கோடி மதிப்பில் மதுபானங்கள் மற்றும் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்தும் மிகப்பெரிய நடவடிக்கை இது என தலைமை தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரியில் பறக்கும் படை குழுவின் தலைமை பொறுப்பாளரை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்பாளரின் வாகனத்தை முறையாக சோதனை செய்யவில்லை என புகார் எழுந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications