மின்வெட்டை உருவாக்கியுள்ளனர்! எதிர்கட்சி ஆளும் மாநிலங்கள் தான் காரணம் - மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்!
டெல்லி : எதிர்க்கட்சிகள் ஆளும் பெரும்பாலான மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு அவர்களால் உருவாக்கப்பட்டவையாகும் எனவும், மின்சார தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவில் நிலக்கரி கையிருப்பில் உள்ளது என மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏசி, ஃபேன், ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் மின் தேவையும் கூடியுள்ளது.
இதன் காரணமாக பல மாநிலங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்துள்ளனர். மேலும் நிலக்கரி தட்டுப்பாடு உள்ளதாக கூறப்படுகிறது.

திடீர் மின் தடை
ஹரியானா, டெல்லி, ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் பல இடங்களில் 10 மணிநேர மின்வெட்டு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பல பிரபலங்களே அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் மின் தடையால் பல மாநிலங்கள் இருளில் மூழ்கி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். மாற்று மின்சார வசதி இல்லாத மருத்துவமனைகளிலும் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்
திடீர் கோளாறு காரணமாக டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், இமாச்சலபிரதேசம், ராஜஸ்தான், காஷ்மீர் ஆகிய 7 வட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் கடந்த சில நாட்களுக்கு முன் கடும் மின் வெட்டு ஏற்பட்டது. ஆனால் அது அடுத்த நாளே சரிசெய்யப்பட்டது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் ஆளும் பெரும்பாலான மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு அவர்களால் உருவாக்கப்பட்டவையாகும் எனவும், மின்சார தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவில் நிலக்கரி கையிருப்பில் உள்ளது என மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியுள்ளார்.

சிக்கலில் கோல் இந்தியா
நாட்டின் தேவை வியாழன் பிற்பகலில் 204 ஜிகாவாட்களை எட்டி புதிய உச்சத்தை தொட்ட நிலையில், நிலக்கரி தரவில்லை என மத்திய அரசை குறை கூறும் பல மாநிலங்கள் இதுவரை வழங்கிய நிலக்கரிக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தவில்லை எனவும், இதனால் கோல் இந்தியா சிக்க வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்த ஆர்.கே.சிங், இந்த மாநிலங்கள் மின்சாரம் வாங்குவதற்குப் பதிலாக மத்திய அரசு மீது சுமைகளை புகுத்த விரும்புகின்றன, மக்களின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒரு யூனிட்டுக்கு ரூ.12 என்ற கட்டணத்தில் கிடைக்கும் மின்சாரத்தை விலைக்கு வாங்கி சுமையை குறைக்கக் கூட முயற்சிக்கவில்லை என்றார்.

நிலக்கரி இருப்பு
மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு குறித்து பேசிய அவர், லாஜிஸ்டிக் பிரச்சனைகள் காரணமாக சில மின் உற்பத்தி நிலையங்களில் சிக்கல்கள் உள்ளன, ஆனால் போதுமான நிலக்கரி இருப்பு உள்ளது என்றும், 21 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு மின் உற்பத்தி நிலையங்களில் உள்ளது, இது 10 நாட்களுக்கு போதுமானது எனவும் ஆர்.கே.சிங் கூறினார். 2019-20ல் நிலக்கரி வழங்கல் 569 மில்லியன் டன்னிலிருந்து 2021-22ல் 662 மில்லியன் டன்னாக உயர்ந்ததைச் சுட்டிக்காட்டிய சிங், திடீர் தேவை அதிகரிப்பால் லேசான சிக்கல் வந்ததாக குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications