அடுத்த ஆண்டு முதல் பிஎஃப் பணத்தை ஏடிஎம்மில் எடுக்கலாமே! என்னென்ன ஆவணங்கள் தேவை?
டெல்லி: ஏடிஎம் மையத்தில் பிஎஃப் பணத்தை எடுக்கும் திட்டம் அடுத்த ஆண்டு அதாவது 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமலுக்கு வரும் என தகவல்கள் கிடைத்துள்ளன.
EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 7.37 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களின் நலனுக்காக இபிஎஃப்ஓ 3.0 என்ற புதிய வரைவு கொள்கை வரையறுக்கப்பட்டுள்ளது.

இது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இது நாள் வரை பிஎஃப் அக்கவுன்ட்டில் இருந்து பணம் எடுப்பது என்பது சற்று கடினமாக இருந்து வருகிறது. இது குறித்து பல்வேறு புகார்கள் சென்ற வண்ணம் உள்ளன.
எனவே இதை எளிமையாக்க ஏடிஎம் மையங்கள் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கென பிரத்யேகமான ஏடிஎம் அட்டைகள் வழங்கப்படும். தங்கள் சொந்த செலவிற்கு பணம் தேவைப்படுபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட பிறகு ஏடிஎம் மையங்களில் எளிமையான முறையில் பணம் எடுத்துக் கொள்ளலாம். எல்லா பணத்தையும் எடுத்துவிட முடியாது. அதற்கென வரம்பு நிர்ணயிக்கப்படும். தற்போது தொழிலாளர் பங்களிப்பு 12 சதவீதமாக உள்ளது.
புதிய வரைவு கொள்கையில் இந்த வரம்பு நீக்கப்படவுள்ளது.பயனாளிகள் தாங்கள் விரும்பும் தொகையை நிர்ணயித்துக் கொள்ளலாம். 10 சதவீதமோ 15 சதவீதமோ முடிவு செய்து கொள்ளலாம். ஆனால் நிறுவனங்களின் பங்களிப்பு தொகையில் எந்த மாற்றமும் இல்லை. மொத்த தொகையில் 50 சதவீதத்தை எடுத்துக் கொள்ளலாம் என தெரிகிறது.
ஓய்வு பெறுவதற்கு ஓராண்டுக்கு முன்பு 90 சதவீதம் பணத்தையும் அவர்கள் எடுத்துக் கொள்ளலாம். வேலையின்மை, மருத்துவ சிகிச்சை, வீடு வாங்குதல் அல்லது கட்டுதல், குடும்ப உறுப்பினர்களின் திருமணம், வீட்டை புதுப்பித்தல் உள்ளிட்டவைகளுக்கு பிஎஃப் தொகையை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு காரணங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே எடுக்க முடியும்.
ஆன்லைன் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்க என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை பார்ப்போம். UAN எண்ணை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இதற்காக செல்போன் எண்ணை பயன்படுத்தி யூஏஎன் எண்ணை ஆக்டிவேட் செய்யலாம். அது போல் பயனாளியின் ஆதார் அட்டையும் தேவை. அப்போது ஓடிபி கிடைக்க எந்த போன் நம்பர் இணைக்கப்பட்டுள்ளதோ அந்த போனுக்கு வரும் ஓடிபி தேவைப்படுகிறது.
இபிஎஃப்ஓ டேட்டா பேஸில் உறுப்பினரின் வங்கிக் கணக்குடன் ஐஎஃப்எஸ்சி கோடையும் சேர்த்து பதிவிட்டிருக்க வேண்டும். பான் எண்ணையும் கொடுத்திருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications