அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு
டெல்லி: இந்தியாவில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் மருந்துகளின் விலையை எவ்வளவு உயர்த்தலாம் என்பதை அரசே கட்டுப்படுத்தி வருகிறது. இதற்கிடையே பல்வேறு அத்தியாவசிய மருத்துவ பொருட்களின் விலை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயரவுள்ளது. விலையை உயர்த்திக் கொள்ள மத்திய அரசு முக்கியமான அனுமதியைக் கொடுத்துள்ளது.
வலி நிவாரணிகள், ஆன்ட்டி பயாடிக்ஸ் மற்றும் தொற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் ஏப்ரல் 1 முதல் உயர்கிறது. மொத்த விற்பனை விலை மாற்றத்திற்கு ஏற்ப சில்லறை விற்பனையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டியலின் (NLEM) கீழ் வரும் மருந்துகளின் விலையை 0.6% வரை உயர்த்த அரசு அனுமதி அளித்துள்ள சூழலில் விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

விலையேற்றம்
பொதுமக்களுக்குத் தேவையான மருந்துகள் தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் வைக்கப்பட்டு இருக்கும். அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். இந்த பட்டியலில் இருக்கும் மருந்துகள் ஆண்டுக்கு ஒருமுறை விலை மாற்றத்திற்கு உட்படுத்தப்படுகின்றன. அதன்படியே இப்போது 0.6% வரை விலையை உயர்த்த அனுமதி தரப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் வழங்கிய WPI டேட்டாவின் அடிப்படையில், 2024 விலையுடன் ஒப்பிடுகையில் 2025 ஆண்டிற்கான மொத்த விற்பனை விலையை 0.64956% உயர்த்தப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் 1,000க்கும் மேற்பட்ட மருந்துகள் உள்ள சூழலில், விலையேற்றம் அனைத்திற்கும் பொருந்தும்.
அத்தியாவசிய மருந்துப் பட்டியல்
அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் பாராசிட்டமால் போன்ற வலி நிவாரணிகள், பாக்டீரியா தொற்றுகளுக்குப் பயன்படுத்தப்படும் அசித்ரோமைசின் போன்ற ஆன்ட்டி பயாடிக்ஸ், ரத்தசோகை எதிர்ப்பு மருந்துகள், வைட்டமின்கள் மற்றும் தாதுகள் ஆகியவை அடங்கும். தீவிரமான கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளும், ஸ்டீராய்டு வகைகளும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
அதிகரிக்கும் செலவுகள்
ஈரான் போர் காரணமாக இன்புட் செலவுகள் மிகப் பெரியளவில் உயர்ந்துள்ளது. இதனால் மருந்து நிறுவனங்களின் லாபங்களும் கடுமையாகக் குறைத்துவிட்டன. இந்தச் சூழலில் சிறியளவில் விலை ஏற்றத்திற்கு அனுமதி தரப்பட்டுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. போர் காரணமாக சில முக்கிய ஆக்டிவ் பார்மாசூட்டிகல் இன்கிரிடியன்ட் (API) மற்றும் solvents விலைகள் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், இந்த விலையேற்றம் போதுமானதல்ல என்று தொழில்துறை வல்லுநர்கள் குறிப்பிட்டனர்.
போதாது
உதாரணமாக, கடந்த சில வாரங்களில் API-களின் விலைகள் சராசரியாக 30-35% அதிகரித்துள்ளன. கிளிசரின் விலை 64% உயர்ந்துள்ளது. பாராசிட்டமால் 25% மற்றும் சிப்ரோஃப்ளோக்சசின் 30% விலை ஏறியுள்ளன. பாலிவினைல் குளோரைடு மற்றும் அலுமினிய ஃபாயில் போன்ற பேக்கேஜிங் பொருட்களின் விலைகளும் 40% அதிகரித்துள்ளது. அப்படியிருக்கும்போது 0.6% மட்டுமே விலையை ஏற்ற அனுமதித்துள்ளது சரியாக இருக்காது என மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இந்த துறையில் வேலை செய்து வரும் பெயர் வெளியிட விரும்பாத நபர் இது தொடர்பாகக் கூறுகையில் "சிரப்கள், வாய்வழி சொட்டு மருந்துகள் உட்பட ஒவ்வொரு திரவ தயாரிப்பிலும் பயன்படுத்தப்படும் கிளிசரின், புரோபிலீன் கிளைகோல் விலை உயர்ந்துள்ளன. இடைநிலைப் பொருட்களின் விலைகளும் கணிசமாக அதிகரித்துள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, கூடுதலாக விலையை ஏற்ற அனுமதி தர வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications