ஒரே நாடு, ஒரே தேர்தல்.. பொது சிவில் சட்டம்.. பாஜக கனவு அம்போ? ஆட்சி அமைத்தாலும் காத்திருக்கும் சவால்
டெல்லி: பாஜகவிற்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால் அக்கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க ரெடியாகி வருகிறது. கூட்டணி ஆட்சி அமைப்பதால் பல்வேறு சவால்களை பாஜக சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக பாஜகவின் சில கனவு திட்டங்கள் கிடப்பில் போடப்படலாம்.
லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. 400 இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணி வெல்ல வேண்டும் என்ற வியூகத்துடன் தேர்தலை எதிர்கொண்ட பாஜகவிற்கு ரிசல்ட் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. 304 இடங்களை பாஜக மட்டுமே வென்றது.

தற்போதைய தேர்தலின் போது வெளியான கருத்துக் கணிப்புகளும் பாஜக 400 இடங்கள் வரை எட்டும் என்று சொல்லியதால் பாஜகவினர் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் தேர்தல் ரிசல்ட் எதிபாராத அதிர்ச்சியை கொடுத்தது. பாஜக பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களை பெறவில்லை. தற்போதைய நிலவரப்படி பாஜக 240 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
மெஜாரிட்டி கிடைக்காததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளையே பாஜக நம்பியுள்ளது. மறுபக்கம் இந்தியா கூட்டணியும் இந்தக் கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சி அமைக்க முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கான வாய்ப்புகளே அதிகம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
பாஜக ஆட்சி அமைத்தாலும் கூட கூட்டணி ஆட்சியே அமைக்க முடியும் என்பதால் பாஜகவிற்கு பல்வேறு நெருக்கடிகள் உள்ளன. கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டு தேர்தல்களில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அதனால் பாஜக பல்வேறு முக்கிய மசோதாக்களை பாஜக எளிதில் கொண்டு வந்தது.
பிற்படுத்தப்பட்டோருக்கு தேசிய ஆணையம், உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு, ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, ஜிஎஸ்டி, பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் இட ஒதுக்கீடு, குற்றவியல் சட்டங்களில் திருத்தம் என பல்வேறு சட்டங்களை எளிதில் கொண்டு வந்தது.
ஆனால் தற்பொது பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது கூட்டணி ஆட்சியே அமைக்க முடியும் என்பதால், பாஜக தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களை நிறைவேற்றவே சவாலாக அமையும். குறிப்பாக ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் ஆகிய சட்டங்களை பாஜகவால் அவ்வளவு எளிதாக கொண்டு வர முடியாது.
நாடாளுமன்றத்தில் இந்த சட்டங்களை நிறைவேற்ற பாஜகவிற்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தர வேண்டிய நிலை ஏற்படும். எனவே இத்தகைய சட்டங்களை நிறைவேற்ற துணியாது எனவும் கிடப்பில் போடப்படவே அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறும் கருத்தாக உள்ளது.
மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருந்தால் பாஜக எந்த ஒரு சட்டத்தையும் நிறைவேற்றி விடலாம் என திட்டமிட்டே 400 என்ற டார்கெட்டை நிர்ணயித்து பிரசாரத்தை முன்னெடுத்தது ஆனால் பாஜகவால் தற்போது அறுதிப்பெரும்பான்மை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications