மீண்டும் ஊரடங்கு? இந்தியாவில் 2 வாரங்களில் எகிறிய கொரோனா கேஸ்கள்.. ஆய்வாளர்கள் சொல்வது என்ன
டெல்லி: குளிர் காலத்தில் கொரோனா அதிகரிக்கும் நிலையில், இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்ற அச்சம் பலருக்கும் இருக்கும் நிலையில், இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பல ஆண்டு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நாம் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், இப்போது மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பது பலருக்கும் கவலையைத் தருகிறது.

கொரோனா: குளிர்காலத்தில் வரும் நாட்களிலும் இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,. கொரோனா அதிகரித்தாலும் கூட நிலைமை கையை விட்டுப் போகும் அளவுக்கு இருக்காது என்பதால் பெரியளவில் கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும், கொரோனா அதிகரித்தாலும் கூட இது மற்றொரு அலையை ஏற்படுத்தாது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
முந்தைய வேரியண்டுகளுடன் ஒப்பிடும்போது, இப்போது பரவும் ஜேஎன் 1 தீவிர பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு குறைவு என்ற ஆய்வாளர்கள், இந்த ஜேஎன் 1 வகை என்பது ஓமிக்ரான் துணை வேரியண்டின் ஒரு துணை வேரியண்ட் என்றும் தெரிவித்தனர். மேலும், தற்போதைய சூழலில் விமான நிலையங்களில் அனைவருக்கும் சோதனை நடத்த வேண்டியது இல்லை என்றும் குறிப்பிட்ட நபர்களுக்கு டெஸ்டிங் நடத்தினால் போதும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ஜே என் 1 வகை கொரோனா: நாட்டில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருவது உண்மை தான். ஜேஎன் 1 வகை கொரோனாவால் கேஸ்கள் அதிகரித்தாலும் கூட தற்போது கொரோனா உறுதியானவர்களில் 92 சதவீதம் பேர் வீட்டிலேயே தான் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்குப் பாதிப்புகள் லேசாகவே இருப்பதால் மருத்துவச் சிகிச்சை தேவைப்படவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், மருத்துவமனையில் நோயாளிகள் அட்மிட் ஆகும் விகிதமும் சரி, ஆக்சிஜன் தேவையும் சரி பெரியளவில் அதிகரிக்கவில்லை. பிற நோய்ப் பாதிப்பால் மருத்துவமனையில் அட்மிட் ஆகும் சிலருக்குத் தான் தற்செயலாக கொரோனா உறுதியாகிறது.
22 பேர் பலி: கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் நமது நாட்டில் நாட்டில் கொரோனாவால் காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், இந்த எண்ணிக்கை மிக குறைவு என்றும் இதனால் நாம் கவலைகொள்ளத் தேவையில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறினர்.
இந்தியாவில் நேற்று வியாழக்கிழமை மட்டும் 594 பேருக்குப் புதிதாக கொரோனா உறுதியானது. அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 2,311இல் இருந்து 2,669 ஆக அதிகரித்துள்ளது . இதுவரை நமது நாட்டில் 21 பேருக்கு இந்த புதிய ஜேஎன் 1 வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது குளிர் காலத்தில் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்ற போதிலும் இதனால் கட்டுப்பாடுகள் போடும் அளவுக்கு நிலை செல்லாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கண்காணிப்பு தேவை: இது குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி கே பால் கூறுகையில், "இந்தியாவில் உள்ள ஆய்வாளர்கள் இந்த வேரியண்ட்டை உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறார்கள். மாநிலங்கள் சோதனையை அதிகரிக்க வேண்டும். மேலும், கண்காணிப்பு அமைப்புகளை நாம் வலுப்படுத்தவும் வேண்டியது ரொம்பவே அவசியம்" என்று அவர் தெரிவித்தார்.
புது ஜேஎன் 1 வகை கண்டறியப்பட்ட பிறகு நாட்டில் கொரோனா கேஸ்கள் அதிகரித்துள்ள நிலையில், அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதார செயலாளர் சுதன்ஷ் பந்த் கடிதமும் எழுதியிருந்தார்.
கட்டுப்பாடுகள் இருக்காது: வரவிருக்கும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு முக்கியமான கொரோனா கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் அறிவுறுத்தியிருந்தார். மேலும், கொரோனா கேஸ்களை கண்காணிக்க ஏதுவாக இன்ஃப்ளூயன்ஸா போன்ற சுவாச நோய்ப் பாதிப்பு அதிகரித்தால் அது குறித்து ரிப்போர்ட் செய்யுமாறும் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேநேரம் கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications