மசாலாவுக்குள் மறைந்திருந்த எமன்..புற்று நோய் எச்சரிக்கையால் முளைத்த சிக்கல்! இந்த கம்பெனியா இப்படி?
டெல்லி: இந்தியாவில் பிரபலமாக திகழும் பிரபல நிறுவனம் ஒன்று ஏற்றுமதி செய்த மசாலா பாக்கெட்டுகளை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. மனிதர்கள் பயன்படுத்தும் போது பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லியான எத்திலின் ஆக்சைடு அந்த மசாலாவில் அதிகம் இருப்பதாக அந்நாடு குற்றம் சாட்டி இருப்பது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பல்வேறு வகையான மசாலாக்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தரம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களால் பல்வேறு நாடுகளும் இந்திய மசாலாக்களை இறக்குமதி செய்கின்றன.

இந்த நிலையில் இந்தியாவின் மிகப் பிரபலமான மசாலா கம்பெனி ஒன்று சிங்கப்பூரில் சிக்கலை சந்தித்து இருக்கிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன் குழம்பு மசாலாவில் அதிக அளவில் எத்தலின் ஆக்சைடு இருப்பதாக குற்றம் சாட்டிய சிங்கப்பூர் அரசு அதனை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
எவரெஸ்ட் மசாலா: எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன் மசாலாவில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட எத்திலின் ஆக்சைட் அதிகமாக இருப்பதாக ஹாங்காங் உணவு பாதுகாப்பு அமைப்பும் விடுத்த எச்சரிக்கையின் விளைவாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. எத்திலின் ஆக்சைடு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலே இருப்பதால் அதனை பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய் வருவதோடு நீண்ட கால உடல் உபாதைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. எனவே எவரெஸ்ட் மீன் மசாலாவை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என ஹாங்காங்கில் உள்ள உணவு பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்ததாகவும் அதன் பெயரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக சிங்கப்பூர் உணவு பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எத்திலின் ஆக்சைட் : உலக அளவில் எவரெஸ்ட் மசாலாவை வெற்றிகரமான பிராண்டாக மாற்றி அதனை ஏற்றுமதி செய்துவரும் எஸ்பி முத்தையா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு இது பலத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே எவரெஸ்ட் தயாரிப்புகளை வாங்கிய வாடிக்கையாளர்கள் அதனை சமையலுக்கு பயன்படுத்தப்பட வேண்டாம் எனவும் ஏற்கனவே சாப்பிட்டவர்களும் தங்களது உடல்நிலை குறித்து மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் எனவும் இது தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் தங்களை தொடர்பு கொள்ளலாம் என சிங்கப்பூர் உணவு பாதுகாப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.
திடீர் தடை: இந்தியாவின் மிகப் பிரபலமான எவரெஸ்ட் நிறுவனம் இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட மசாலா வகைகளை தயாரித்து விற்பனை செய்கிறது. இப்போது சிங்கப்பூரில் ஏற்பட்டிருக்கும் சிக்கலால் இந்திய சந்தைகளிலும் அதற்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. எத்திலின் ஆக்சைடை மசாலா பொருட்களில் பயன்படுத்தப்படுவதை சிங்கப்பூர் தடை செய்திருக்கிறது. விவசாயத்தில் பயிர்களில் நுண்ணுயிர் தாக்குதலை தவிர்ப்பதற்காக எத்தலின் ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்தியாவின் சில விதிமுறைகள் படி எத்திலின் ஆக்சைடை மசாலா பொருட்களில் பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்யலாம்.
நீண்ட கால பாதிப்பு: ஆனால் குறிப்பிட்ட அளவு எத்திலின் ஆக்சைடு மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறைந்த அளவு எத்திலின் ஆக்சைட் உள்ள உணவுகளை உண்பதால் உடனடி ஆபத்து இல்லை என்றாலும் நீண்டகால பிரச்சனைகளையும் எதிர் மறையான உடல்நல கோளாறுகளையும் ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். மனிதர்கள் எத்திலின் ஆக்சைடை நீண்ட காலமாக உட்கொள்வதால் கண்கள், தோல், மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரலில் எரிச்சல், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படலாம் என அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இனப்பெருக்க மண்டலங்களையும் பாதிக்கும் என ஏற்கனவே பல ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
சிக்கல்: கடந்தாண்டு ஜூலை மாதம் 11 அமெரிக்க மாகாணங்களில் விநியோகிக்கப்பட்ட மூன்று இந்திய மசாலா பொருட்களில் சால்மோனெல்லா பாக்டீரியா இருப்பது உறுதி செய்யப்பட்டதை எடுத்து அவை திரும்ப பெறப்பட்டன. அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட கரம் மசாலா, சாம்பார் மசாலா போன்ற பொருட்களில் சால்மோனெல்லா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து எவரெஸ்ட் நிறுவனத்தின் பொருட்கள் திரும்பப் பெறப்பட்டன. இந்த நிலையில் தற்போது சிங்கப்பூரிலும் இந்த பிரச்சனை எழுந்திருப்பது இந்திய மசாலா கம்பெனிகளின் வர்த்தகத்தை வெகுவாக பாதித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications