பயங்கரவாதத்தை உலகமே எதிர்க்க காரணமே மோடி அரசின் ராஜதந்திரம்தான்.. மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
டெல்லி: இந்தியா தகவல் தொழில்நுட்பத் துறை எனும் ஐடி துறையில் முன்னணியில் உள்ளது; ஆனால் பாகிஸ்தான், இண்டர்நேஷனல் டெர்ரரிஸ்டுகள் எனும் ஐடி ஏரியாவில் முன்னிலை வகிக்கிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக சாடி உள்ளார்.
குஜராத் மாநிலம் வதோராவில் பிரதமர் மோடி காலத்து வெளியுறவுக் கொள்கை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.

ஐடி எக்ஸ்பர்ட் பாக்.
இக்கருத்தரங்கில் மத்திய அமைச்சர் பேசியதாவது: உலகம் எந்த வகையிலான பயங்கரவாதத்தையும் சகித்துக் கொள்ள தயாராக இல்லை. இந்தியாவுக்கும் ஒரு அண்டை நாடு இருக்கிறது. நமது நாடு தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் இருக்கிறது; ஆனால் அந்த அண்டை நாடு இண்டர்நேஷனல் டெர்ரரிஸ்டுகள் எனும் துறையில் முதன்மையாக இருக்கிறது.

பயங்கரவாதம்
பயங்கரவாதம் என்ன என்பது என்பது உலகுக்கு நாம் விளக்கி இருக்கிறோம். பயங்கரவாதம் என்பது இன்று இந்தியாவுக்கு எதிரானதாக மட்டும் இருக்கும்; நாளை ஒட்டுமொத்த உலகத்துக்கும் பயங்கரவாதம் ஆபத்தானதாக உருமாறிவிடும். உலகில் எந்த ஒரு நாடும் இப்படி ஒரு பயங்கரவாத பாதையில் செல்வது இல்லை. இந்தியாவுக்கு எதிராக தமது பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நீண்டகாலமாக செயல்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி ஆட்சிக் காலத்தில் பாகிஸ்தானின் பயங்கரவாதம் எந்த அளவுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்பது விளக்கப்பட்டிருக்கிறது.

ராஜதந்திரத்துக்கு வெற்றி
இதற்கு முன்னர் தங்களை எல்லாம் பயங்கரவாதம் பாதிக்காது என உலக நாடுகள் அலட்சியமாக இருந்தன. ஆனால் இன்று பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒருசேர இணைந்து அழுத்தம் கொடுக்கின்றன. நமது ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றியாக, ஒரு உதாரணமாக திகழ்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து இணைந்து செயல்படும்.

கச்சா எண்ணெய் விவகாரம்
ரஷ்யா-உக்ரைன் யுத்தத்தால் கச்சா எண்ணெய் விலை இரு மடங்காக உயர்ந்துவிட்டது. தற்போது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது என அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதில் எந்த அழுத்தத்துக்கும் அடிபணியக் கூடாது என பிரதமர் மோடி அறிவுறுத்தி இருக்கிறார். அதன்படியே இந்தியா தமது பாதையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications