விவசாயிகளுக்கு "குடை" பிடித்த மோடி.. படக்னு பிடுங்கி, மடக்னு குடையை விரித்ததுமே மலைச்சு போயிட்டாங்க
டெல்லி: விவசாயிகளுக்கு பிரதமர் மோடி குடை பிடித்த வீடியோதான் இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது.. டெல்லியில் என்ன நடந்தது?
ஐசிஏஆர் என்று சொல்லப்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகமானது, தலைநகர் டெல்லியில் ராஜேந்திர பிரசாத் சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி கழகத்தில் சுமார் 1,250 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய பண்ணை ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

தட்பவெப்ப நிலைக்கு உகந்த, சரியான மகசூல் தரக்கூடிய, பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைக்கும் விதைகள் நமக்குத் தேவை என்பதால், விதைகளை உற்பத்தி செய்வது, ஆராய்ச்சி செய்வதன் மூலம் விதைகளை உருவாக்குவது போன்ற பணிகளில் இந்த இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
ஆராய்ச்சிகள்: இதன்காரணமாக, தொடர்ந்து ஏராளமான ஆராய்ச்சிகள் இந்த பண்ணையில் நடத்தப்பட்டு வருகின்றன.. அதேபோல, பொதுமக்களின் நன்மைகளை கருத்தில் கொண்டு, புதிய வகை பயிர்களும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஐசிஏஆர் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட 109 புதிய பயிர் வகைகளை பிரதமர் மோடி, இந்த பண்ணையில் அறிமுகம் செய்து வைத்திருந்தார். இது அனைத்து காலநிலையிலும் வளரக்கூடிய பயிர்களாகும்.. இதில் 23 வகையான தானியங்களின் விதைகள், 9 அரிசி விதைகள், 2 கோதுமை விதைகள் கோதுமை 2, 40 தோட்டக்கலை வகைகள் போன்றவை அடங்கும்.
பிறகு, ஐசிஏஆர் பண்ணை வளாகத்தை முழுமையாக சுற்றிப்பார்த்தார்.. அப்போது அங்கிருந்த இயற்கை வேளாண்மை விவசாயிகளுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.. அந்த நேரம் பார்த்து, திடீரென மழை தூவ ஆரம்பித்துவிட்டது.. இதைப்பார்த்த அதிகாரிகள், பிரதமர் நனைந்துவிடக்கூடாது என்பதற்காக, ஓடோடி சென்று குடையை எடுத்து வந்தார்கள்.
ஆச்சரியம்: ஆனால், அதிகாரிகளிடமிருந்து அவசரமாக குடையை வாங்கிய பிரதமர் மோடி, விவசாயிகள் நனையாமல் இருக்க அவர்களுக்கு குடை பிடித்தார்... இதைப்பார்த்த விவசாயிகள், அதிகாரிகள் என ஒட்டுமொத்த பேருமே ஆச்சரியத்தில் உறைந்துபோய்விட்டார்கள்..
நேற்றைய தினம், கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்த நிகழ்ச்சியை ஒத்திவைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்ட போதிலும், விவசாயிகளின் நலன் கருதி, அதை ஏற்க பிரதமர் மோடி மறுத்துவிட்டாராம். பிறகு மழையில் நனையாதவாறு குடையை பிடிக்க வந்தபோதிலும், அதையும் மறுத்து விவசாயிகளுக்கே குடை பிடித்து நின்றாராம்.
பிஎம் கிசான்: பிரதமர் மோடியை மோடியை பொறுத்தவரை, விவசாயிகளின் நலனிலும், அவர்களின் முன்னேற்றத்திலும் தொடர்ந்து அக்கறை காட்டி வருபவர்.. அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காக பிஎம் கிசான் உள்ளிட்ட எத்தனையோ திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.. இப்போதும் அவர்கள் பலன்பெறும் வகையில், புதுபுது அறிவிப்புகளை வெளியிட்டவாறே உள்ளார்.
இதற்கு முன்பு எத்தனையோ முறை பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறார்.. அங்கெல்லாம் திடீரென மழை வந்துவிட்டால், அந்த நாடுகளின் அதிபர்களும், தலைவர்களும் பிரதமர் மோடிக்கு குடைபிடித்த சம்பவங்கள் பலமுறை நடந்திருக்கின்றன.. ஆனால், தன்னுடைய நாட்டு விவசாயிகளுக்கு குடைபிடித்துள்ளதுதான், அனைவராலும் வியந்து பார்க்கப்பட்டு வருகிறது.
டிரெண்டிங் வீடியோ: பிரதமரின் எளிமையும், மனிதாபிமானமும் தங்களை வியக்க வைப்பதாக விவசாயிகள் நெகிழ்ந்து சொல்லி வருகிறார்கள்.. டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில், விவசாயிகளுக்கு மோடி குடை பிடித்த சம்பவம்தான் இன்றைக்கு டிரெண்டாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications