'டெல்லி சலோ’ போராட்ட களத்தில் ஷாக்.. பஞ்சாப் விவசாயி மாரடைப்பால் பலி
டெல்லி: விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வலியுறுத்தும் வகையில், நாடு முழுவதும் இன்று பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சம்பு எல்லையில் விவசாயிகள் போராட்ட களத்தில் மாரடைப்பால் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். 'தி சம்யுக்தா கிசான்மோர்சா, தி கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 37 விவசாயிகள் சங்கங்தினர் இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். டெல்லியை நோக்கி செல்லும் இந்த போராட்டத்தை கடந்த செவ்வாய்க்கிழமை விவசாயிகள் தொடங்கினர்.

அவர்களை ஹரியானா எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாமல் தடுக்க ஹரியானா - டெல்லி எல்லையில் போலீசார் தடுப்புகள் அமைத்துள்ளனர். ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று 3வது நாளாக போராட்டம் நடந்தது. போலீசார் மற்றும் விவசாயிகள் இடையே தள்ளுமுள்ளு நடந்தது.
முழு அடைப்பு: இந்த போராட்டம் இன்னும் தொடர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி எல்லையில் பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராடம் அமைதியான முறையில் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதனிடையே, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று பல்வேறு விவசாய அமைப்புகள் நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.
சாலை மறியல்: சம்யுக்தா கிஷான் மோர்ச்சா உள்பட பல விவசாய அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பாரத் பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை முக்கிய சாலைகளை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற உள்ள பாரத் பந்தில் அதிமுகவின் 17 தொழிற்சங்கங்களும் பங்கேற்கும் என்று அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமலக்கண்ணன், மத்திய அரசைக் கண்டித்து ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளில் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள போராட்டத்தில் அதிமுக தொழிற்சங்கமும் பங்கேற்கும். திமுகவுக்கு தொழிலாளர்கள் மீது அக்கறை இல்லை" எனக் குற்றம் சாட்டினார்.
போக்குவரத்து நெரிசல்: விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பால் வட மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை ஓரளவு பாதிக்கப்பட்டது. டெல்லி - காசியாபாத் எல்லையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஞ்சாபிலும் விவசாயிகளின் முழு அடைப்பிற்கு அரசு ஊழியர்களும் ஆதரவு அளித்தனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு முடங்கியது. பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கின.
விவசாயி சாவு: இதனிடையே, சம்பு எல்லையில் விவசாயிகள் போராட்ட களத்தில் இருந்த 63 வயது விவசாயியான கியான் சிங் என்பவருக்கு இன்று காலை திடிரெனெ நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக அங்கிருந்த சக விவசாயிகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர். போராட்ட களத்தில் விவசாயி ஒருவர் பலியாகியிருப்பது விவசாயிகளுக்கு பெரும் சோகத்தை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications