போலீஸ் தாக்குதலில் பலியான விவசாயி.. பாஜக தலைவரின் உருவபொம்மை எரித்து போராட்டம்.. மீண்டும் பரபரப்பு
டெல்லி: பஞ்சாப்-ஹரியானா எல்லையில் விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்றிருந்த இளம் விவசாயி ஒருவர், காவல்துறை தாக்குதலில் உயிரிழந்தார். இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாயிகள் இன்று கறுப்பு தினத்தை அனுசரித்துள்ளனர். அதேபோல, பாஜக தலைவர்களின் உருவ பொம்மையையும் எரித்துள்ளனர்.
கடந்த 2020ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் டெல்லி நோக்கி படையெடுத்து வந்து, போராட்டத்தை தொடங்கினர். தொடர் போராட்டம் காரணமாக மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றுக்கொண்டது. இந்நிலையில், இதேபோன்ற போராட்டத்தை விவசாயிகள் மீண்டும் தொடங்கியுள்ளனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து டெல்லி நோக்கி அவர்கள் அணி வகுக்க தொடங்கியுள்ளனர்.

விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும், விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும். சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும், 2021 லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013ஐ மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், மற்றும் 2020-21ல் முந்தைய போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த போராட்டங்கள் தங்களின் வாக்கு வங்கிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மத்திய அரசு உணர்ந்திருக்கிறது. எனவே, பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்திருக்கிறது. மூன்று அமைச்சர்கள் கொண்ட குழு இந்த பேச்சுவார்ததையை நடத்தி வருகிறது. இதுவரை 4 சுற்று பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்த நிலையில், 5ம் சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. ஆனால், தொடர் பேச்சுவார்த்தை மூலம் மத்திய அரசு காலத்தை வீணடிப்பதாக விவசா சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
பேச்சுவார்த்த மத்திய அரசு நடத்தி வரும் நிலையில், விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய விடாமல், பஞ்சாப்-ஹரியானா எல்லையிலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர். டெல்லியை இணைக்கும் முக்கிய சாலைகளில் பல கட்ட தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். சிமெண்ட் தடுப்புகள், முள் வேலிகள், சாலையில் ஆணிகளை பதித்தல், கண்டெய்னர் கொண்ட சாலையை அடைத்தல் என பல கட்ட தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 25 வயது இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இன்று கருப்பு வெள்ளியை அனுசரித்துள்ளனர். மட்டுமல்லாது பாஜக தலைவர்களின் உருவ பொம்மைகளையும், படங்களையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதனால் ஷம்பு பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications