“எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற.. நாடாளுமன்றத்தை கூட்டுங்கள் பிரதமர் மோடி!” விவசாயிகள் வலியுறுத்தல்
டெல்லி: விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் சட்ட மசோதாவை, ஒரு நாள் நாடாளுமன்றத்தை கூட்டி அதில் தாக்கல் செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு விவசாய சங்க தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பில் இருந்து வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எவ்வளவோ போராட்டங்களை நடத்தியிருந்தாலும், அதையெல்லாம் இந்த அரசு பெரியதாக கண்டுக்கொள்ளவில்லை. இவர்களின் கோரிக்கைகளை செவி கொடுத்து கேட்கவும் இல்லை. ஆனால், கடந்த 2020ம் ஆண்டு விவசாயிகள் நடத்திய போராட்டம், மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை மாற்றியது.

அதே அளவுக்கு வீரியம்மிக்க போராட்டத்தை தற்போது விவசாயிகள் மீண்டும் கையில் எடுத்துள்ளனர். தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரி டெல்லி நோக்கி பேரணியை அவர்கள் தொடங்கியுள்ளனர்.
இதனை தடுக்க மத்திய அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், இது தோல்வியில் முடிந்ததாக அறிவித்த விவசாய சங்கத்தினர் டெல்லியை முற்றுகையிடுவதில் உறுதியாக இருக்கின்றனர். மறுபுறம் காவல்துறையினர் தரப்பில், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து டெல்லியை இணைக்கும் முக்கிய சாலைகளில் பல கட்ட தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். சிமெண்ட் தடுப்புகள், முள் வேலிகள், சாலையில் ஆணிகளை பதித்தல், கண்டெய்னர்களை கொண்டு சாலையை அடைத்தல் என பல கட்ட தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தை ஒரு நாள் கூட்டி அதில், விளை பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை உறுதி செய்யும் சட்ட மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என்று விவசாய சங்க தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த மசோதாவுக்கு அகாலி தளம் தொடங்கி, காங்கிரஸ் வரை அனைத்து கட்சிகளும் ஆதரவளிப்போம் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து பேசிய விவசாயிகளின் தலைவர் சர்வான் சிங் பாந்தர், "நாடாளுமன்றத்தில் விவசாயிகளின் 23 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உறுதி செய்திட வேண்டும். அதேபோல விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும். சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும், 2021 லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013ஐ மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், மற்றும் 2020-21ல் முந்தைய போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்"












Click it and Unblock the Notifications