10 ஆண்டுகளுக்கு பின் முதல்முறை.. திடீரென இந்தியா வரும் பாகிஸ்தான் டாப் அமைச்சர்.. எதற்காக தெரியுமா
டெல்லி: சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாகப் பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் இந்தியா வரவுள்ளார். அவர் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரவுள்ளதாகப் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதலான ஒரு போக்கே பல காலமாக நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக மும்பை தாக்குதலுக்குப் பிறகு உறவு மிக மோசமானதாக மாறியது.

அதன் பின்னர் எல்லையிலும் கூட பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது. பாகிஸ்தான் எல்லையில் இருந்து பயங்கரவாதிகள், டிரோன்கள் நுழைய முயலும் சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு இன்னுமே சீராகவில்லை. இந்திய அமைச்சர்கள் யாரும் பாகிஸ்தான் செல்வதில்லை. அதேபோல பாகிஸ்தான் அமைச்சர்களும் யாரும் பல ஆண்டுகளாக இந்தியா வருவதில்லை. இதனிடையே சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாகப் பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் முதல்முறையாக இந்தியா வரவுள்ளார். இதை அந்நாட்டு அரசே உறுதி செய்துள்ளது.
கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கப் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி அடுத்த மாதம் இந்தியா வருவார் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜஹ்ரா பலோச் கூறுகையில், "இந்தியாவின் கோவாவில் 2023 மே 4-5 தேதிகளில் நடைபெறும் ஷாங்காங் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கவுன்சிலில் கலந்து கொள்ளும் பாகிஸ்தான் தூது குழுவை பிலாவல் பூட்டோ சர்தாரி வழிநடத்துவார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சாசனம் மற்றும் செயல்முறைகள் மதிக்கும் வகையிலும் பாகிஸ்தானுக்கு நன்மை வழங்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் நவாஸ் ஷரீப் இந்தியா வந்திருந்தார். அதன் பின்னர் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறையாகும். தற்போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை பொறுப்பை வகிக்கும் இந்தியா, உறுப்பு நாடுகளான சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சர் கின் கேங் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி உள்ளிட்டோருக்குக் கடந்த ஜூன் மாதம் தான் அழைப்பை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த பிப். மாதம் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "பாகிஸ்தான் உட்பட அனைத்து எஸ்சிஓ நாடுகளுக்கும் வழக்கம் போல அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் அனைவரும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆகியவற்றிற்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவுச் சிக்கலான நிலையில் இருப்பது குறிப்பிடதக்கது.
கடந்த ஆகஸ்ட் 2019இல் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தைத் திரும்பப் பெற்று அதை யூனியன் பிரதேசமாக அறிவித்த பின் நிலைமை மேலும் மோசமானது குறிப்பிடத்தக்கது. ஷாங்காய் கூட்டமைப்பு என்பது ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு பிராந்திய அரசியல் மற்றும் பாதுகாப்புக் குழுவாகும். இதன் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் கோவாவில் நடைபெறும் நிலையில், அதில் தான் பாகிஸ்தான் அமைச்சர் கலந்து கொள்ள உள்ளார்.
கடந்த 2017 ஜூன் 9இல் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் முழுநேர உறுப்பினராக இந்தியா ஆனது. எட்டு உறுப்பினர்களைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு அதன் உறுப்பு நாடுகளிடையே பொருளாதார, அரசியல் மற்றும் ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்தை மேம்படுத்த 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் நாடுகள் என்பது உலகின் மொத்த மக்கள்தொகையில் 42% பேரையும், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% உள்ளடக்கியது ஆகும்.












Click it and Unblock the Notifications