மக்களவையில் டென்ஷன்: சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! இன்று அரங்கேறும் அக்னிப்பரீட்சை
டெல்லி: இந்திய அரசியலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது.. இந்த அமர்வின் முதல் நாளிலேயே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை பதவி நீக்கம் செய்யக் கோரும் எதிர்க்கட்சிகளின் தீர்மானம் விவாதம் மற்றும் வாக்கெடுப்பிற்காகத் தாக்கல் செய்யப்பட உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..
கடந்த ஜனவரி 28ம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய முதல்கட்ட அமர்வு, பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற்றது.. அந்த சமயத்தில் ராகுல் காந்தி பேச அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம், முன்னாள் ராணுவத் தளபதி நரவணேயின் சுயசரிதை நூல் சர்ச்சை மற்றும் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் போன்ற விவகாரங்களால் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவியது..

50 எம்பி.க்கள்
குறிப்பாக, கடந்த அமர்வின் போது 8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதும், பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்ததாக ஓம் பிர்லா சுமத்திய குற்றச்சாட்டும் மோதலை உச்சகட்டத்திற்கு கொண்டு சென்றது..
இதனால் அவர் பாரபட்சமாக செயல்படுவதாகக் கூறி, காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளின் 118 எம்.பி.க்கள் அவருக்கு எதிராகப் பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் அளித்தனர்..
இந்த தீர்மானம் ஏற்கப்பட 50 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.. இதற்காக பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு தரப்புமே தங்கள் எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன.. ஆரம்பத்தில் கையொப்பமிடாத திரிணமூல் காங்கிரஸ் தற்போது இந்த தீர்மானத்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளது..
ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல்?
இருந்தாலும் கடந்த காலங்களில் மாவலங்கர், ஹுக்கம் சிங் போன்ற தலைவர்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் தோல்வியடைந்தது போலவே, தற்போதைய எம்.பி.க்களின் பலத்தின் அடிப்படையில் இந்த தீர்மானமும் தோல்வியடையவே வாய்ப்புகள் அதிகம் என்று கருதப்படுகிறது..
ஏப்ரல் 2ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த 2ம் கட்ட அமர்வில் பல சர்வதேச மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளன.. குறிப்பாக, மேற்காசிய போர் நிலவரம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்..
ஆனால் வெறும் அறிக்கை மட்டும் போதாது, அது குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் பிடிவாதமாக உள்ளதாக தெரிகிறது.. மேலும் ஈரான் மீதான அரசின் நிலைப்பாடு மற்றும் ரஷிய எண்ணெய் கொள்முதல் போன்ற விவகாரங்களையும் எழுப்ப அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது..
எதிர்க்கட்சிகள் பிளான்
மாநில அரசியலை பொறுத்தவரை, மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால் அம்மாநில வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரத்தை திரிணமூல் காங்கிரஸ் கையில் எடுக்கும் என்றே தெரிகிறது.. அதேநேரம், அங்கு குடியரசு தலைவரின் பயணத்தின் போது மாநில அரசு விதிமுறைகளை மீறி அவரை அவமதித்ததாகக் கூறப்படும் புகாரை பாஜக முன்வைக்க வாய்ப்புள்ளது..
இப்படி ஏகப்பட்ட முக்கிய பிரச்சனைகளுடன் தொடங்கும் இந்த கூட்டத்தொடர் மிகவும் அனல் பறக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது..!!












Click it and Unblock the Notifications