Flash Back: 2018 நம்பிக்கை இல்லா தீர்மானம்- 12 மணிநேர விவாதம்- மோடியை கட்டியணைத்து கண்ணடித்த ராகுல்!
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு மீதான 2-வது நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று லோக்சபாவில் விவாதம் நடைபெற உள்ளது. 2018-ல் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பேசி முடித்தவுடன் பிரதமர் மோடியை கட்டியணைத்து பரபரப்பை கிளப்பிய ராகுல் காந்தி இன்று என்ன செய்வார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் தரவேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் கோரிக்கை. பிரதமர் மோடி விளக்கம் தராத நிலையில், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை காங்கிரஸின் கவுரவ் கோகோய் தாக்கல் செய்திருந்தார். இதனை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றதைத் தொடர்ந்து இன்று விவாதம் தொடங்குகிறது.

பிரதமர் மோடி அரசு மீதான 2-வது நம்பிக்கை இல்லா தீர்மானம் இது. இன்றைய நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் சார்பாக ராகுல் காந்தி முதலில் பேசுகிறார். 137 நாட்களுக்கு முன்னர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவருடைய எம்பி பதவி பறிக்கப்பட்டது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான உச்சநீதிமன்றத் தீர்ப்பால் நேற்றுதான் ராகுல் காந்தி எம்பி பதவி திரும்ப வழங்கப்பட்டது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் இன்றைய பேச்சு மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட இருக்கிறது.

12 மணிநேர விவாதம்: 2018-ம் ஆண்டு தெலுங்கானா தனி மாநில உருவாக்கத்தினால் ஆந்திராவுக்கு ஒதுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட சிறப்பு நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. இத்தீர்மானத்தின் மீது மொத்தம் 12 மணிநேரம் விவாதம் நடைபெற்றது.
ராகுல் ஆவேச பேச்சு: 2018-ம் ஆண்டு லோக்சபாவில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது பேசிய ராகுல் காந்தி, பொதுமக்களின் வங்கி கணக்கில் ரூ15 லட்சம் டெபாசிட் செய்யப்படும்; 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி வாக்குறுதி வழங்கினார். ஜிஎஸ்டி முறையை காங்கிரஸ் அறிமுகப்படுத்தியது. அப்போது பாஜக கடுமையாக எதிர்த்தது. காங்கிரஸ் ஒரே விதமான ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தினால் பிரதமர் மோடி 5 வகையான ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்துகிறார். நீங்கள் பொய் சொல்லலாம்.. லத்தியால் அடிக்கலாம்.. பொதுமக்களை விமர்சிக்கலாம். உங்களால் நான் பப்புவாக தெரிகிறேன். நீங்கள் என்னை விமர்சித்தாலும் உங்கள் மீது துளியும் வெறுப்பும் கோபமும் எங்களுக்கும் இல்லை என ஆவேசமாக ராகுல் காந்தி பேசினார்.
மோடியை கட்டியணைத்த ராகுல்: ராகுல் காந்தி தமது உரையை நிறைவு செய்த உடன் யாரும் எதிர்பார்க்காமல், பிரதமர் மோடியின் இருக்கை அருகே சென்றார். இருக்கையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடியை கட்டியணைத்தார் ராகுல் காந்தி. பிரதமர் மோடியும் ராகுலை கட்டியணைத்து கை கொடுத்து தட்டி கொடுத்தார்.

மோடியை பார்த்து கண்ணடித்த ராகுல்: அத்துடன் ராகுல் காந்தி நிற்கவில்லை. பிரதமர் மோடியை கட்டியணைத்த நிலையில் தமது இருக்கைக்கு சென்று அமர்ந்தார் ராகுல். அந்த இருக்கையில் அமர்ந்தபடியே ராகுல் காந்தி பிரதமர் மோடியை பார்த்து கண்களை சிமிட்டி கண்ணடித்தார். இதனால் சபையில் அனைவரது பார்வையும் பிரதமர் மோடி- ராகுல் மீதே இருந்தது. மறுநாள் அனைத்து ஊடகங்களிலும் பிரதமர் மோடியை ராகுல் காந்தி கட்டியணைத்த காட்சிகளே பிரதானமாகவும் இடம் பெற்றிருந்தன. இந்த விவாதத்தின் போது பிரதமர் மோடி 90 நிமிடங்கள் பதிலளித்தார்.
தீர்மானம் தோல்வி: 2018-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக 325 எம்.பி.க்கள் வாக்களித்தனர். இத்தீர்மானத்தை மொத்தம் 126 எம்.பி.க்கள் மட்டுமே ஆதரித்தனர். இதனால் தெலுங்குதேசம் கொண்டு வந்த 2018-ம் ஆண்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.












Click it and Unblock the Notifications