7 வருடங்களில் முதல் முறை..! பின்வாங்கிய மோடி..! கெத்து காட்டிய விவசாயிகள்! நடந்தது என்ன?
டெல்லி: கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்ற பிறகு பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை பிரதமர் மோடி எடுத்த நிலையில், கடும் விமர்சனம், எதிர்ப்பு என எதற்கும் அவர் பின்வாங்கியதே இல்லை. ஆனால் விவசாயிகள் விவகாரத்தில் பிரதமர் மோடி பின்வாங்கியது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
Recommended Video
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் விவசாய மசோதாவை மோடி அரசு நிறைவேற்றியது. மொத்தம் 3 சட்டங்களை உள்ளடக்கியது இந்த மசோதா.
விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்ய முடியும் என்பது தான் மத்திய அரசு கொண்டு வந்த இந்த சட்டத்தின் அம்சம் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த சட்டம் தனியார் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவானது, விவசாயிகள் முழுக்க முழுக்க தனியார் பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் செல்லக்கூடிய ஆபத்து உள்ளது என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மத்திய அரசின் விவசாய சட்டத்திற்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு இருந்தது. ஆனால் பஞ்சாப் விவசாயிகள் தான், இந்த போராட்டத்தை தீவிரப்படுத்தினர். மத்திய அரசின் சட்டத்தால் விவசாயிகள் தங்கள் நிலத்தை இழக்க நேரிடும் என்கிற பிரச்சாரம் விவசாயிகளை சூடாக்கியது. இதனால் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச மாநிலங்களில் இருந்து டிராக்டர்களுடன் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தனர். டெல்லியில் ஆங்காங்கே குடில் அமைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். கடந்த ஜனவரி 26ந் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் நடத்திய பேரணி வன்முறையில் முடிந்தது.
இதன் பிறகு விவசாயிகள் போராட்டம் திசை மாறினாலும் கூட பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் இந்த போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். சுழற்சி முறையில் பஞ்சாப் முழுவதிலும் இருந்து விவசாயிகள் டெல்லி வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதே போல் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் ஆங்காங்கே தங்கள் போராட்டத்தை தொடர்ந்து கொண்டே இருந்தனர். சட்டம் நிறைவேறி ஒரு வருடத்தை கடந்த பின்னரும் கூட விவசாயிகளிடம் எதிர்ப்பு குறையவில்லை.
இதனிடையே நாடு முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வியை தழுவியது. கடந்த முறை வெற்றி பெற்ற பல தொகுதிகளை பாஜக இழந்தது. இந்த நிலையில் விரைவில் பஞ்சாப், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து குஜராத் மாநிலமும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. அதிலும் தேர்தலை எதிர்கொண்டுள்ள பஞ்சாப் மாநிலத்தில் பாஜகவிற்கு கடுமையான எதிர்ப்பு மனநிலை உள்ளது.
அங்குள்ள விவசாயிகள் தான் விவசாய சட்டத்திற்கு எதிராக போர்க் கோலம் பூண்டுள்ளனர். எனவே தேர்தல் நேரத்தில் விவசாயிகளை பகைத்துக் கொள்ளக்கூடாது என்கிற மோடியின் வியூகம் தான் விவசாய சட்டங்களை ரத்து செய்ய வைத்துள்ளது. விவசாயிகளுடனான மோதல் போக்கை தொடர்ந்து கொண்டே பஞ்சாப் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வது அவ்வளவு புத்திசாலித்தனம் இல்லை என்கிற உளவுத்துறையின் ரிப்போர்ட்டும மோடியை யோசிக்க வைத்துள்ளது. இதே போல் காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சி துவங்கியுள்ள அம்ரீந்தர் சிங் - பாஜக இடையிலான ஒரு அன்டர்ஸ்டேன்டிங்கும் விவசாய சட்டம் ரத்து செய்யப்பட காரணமாகியுள்ளது.
அந்த வகையில் இதற்கு முன்பு பாஜக ஆட்சியில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை சட்ட திருத்தம், ஜிஎஸ்டி அமல் என பல்வேறு முக்கிய விஷயங்கள் நடைமுறைக்கு வந்தன. இவற்றுக்கும் கடும் எதிர்பபுகள் எழுந்தன. ஆனால் தன் முடிவில் மோடி உறுதியாக இருந்தார். ஆனால் இந்த உறுதி விவசாயிகள் விவகாரத்தில் மோடியிடம் இல்லாமல் போனது. அதனால் தான் இந்திய விவசாயிகளின் நெஞ்சுரத்துடன் கூடிய போராட்டம் தற்போது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications