சீனாவுக்கு எதிராக என்ன வேணும்னாலும் செய்யுங்கள்.. ராணுவ தளபதியிடம் சொன்ன ராஜ்நாத் சிங்?
டெல்லி: 2020 ஆம் ஆண்டு இந்தியா - சீனா இடையே லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலுக்கு முன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தன்னிடம் சொன்ன விசயம் மற்றும் அப்போது ராணுவத்தின் நகர்வு குறித்து விளக்கமளித்து இருக்கிறார் முன்னாள் ராணுவ தலைமை தளபதி நரவானே.
கடந்த 2020 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி இரவு இந்தியா மற்றும் சீனாவுக்கு மிக முக்கியமான நேரமாக இருந்தது. அந்த சமயத்தில்தான் கிழக்கு லடாக்கில் உள்ள ரேச்சின் லா மலைப்பாதையில் சீன ராணுவம் பீரங்கிகள் மற்றும் துருப்புகளுடன் இந்திய எல்லைக்குள் புகுந்ததால் இரு தரப்பினர் இடையே மோதம் ஏற்பட்டது. அப்போது நடந்தது என்ன என்று தன்னுடைய சுய சரிதையில் குறிப்பிட்டு இருக்கிறார் இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.ஏ.நரவானே.

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், "நீங்கள் சரியானதாகக் கருதுவதைச் செய்யுங்கள்" என்று கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். "Four Stars of Destiny" என்ற பெயரிலான தன்னுடைய சுயசரிதை நூலில் சீனா - இந்தியா இடையிலான மோதல் நடைபெற்ற அந்த இரவு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி ஆகியோருக்கு இடையே நடந்த தொலைபேசி எண்ணிலடங்காத தொலைப்பேசி அழைப்புகளையும், ராஜ்நாத் சிங் தனக்கு அளித்த வழிகாட்டுதலையும் அவர் விவரித்து உள்ளார்.
ராஜ்நாத்தின் அழைப்பிற்குப் பிறகு, நூற்றுக்கணக்கான சிந்தனைகள் தன் மனதில் "மின்னல் போல் பறந்தன" என்று நரவானே குறிப்பிட்டு உள்ளார். "நான் இந்த நிலைமையின் தீவிரத்தன்மையை பாதுகாப்பு அமைச்சரிடம் தெரிவித்தேன். அவர் என்னிடம் திரும்பி அழைப்பதாக தெரிவித்தார். இரவு சுமார் 10.30 மணிக்கு அவர் என்னை அழைத்தார். தான் பிரதமருடன் பேசிவிட்டதாகவும் இது முழுக்க முழுக்க ராணுவத்தின் முடிவு என்றும், 'நீங்கள் சரியானதாகக் கருதுவதைச் செய்யுங்கள்' என்றும் அவர் கூறினார்.
"என் கையில் ஒரு சூடான உருளைக் கிழங்கு தரப்பட்டதைபோல் இருந்தது. முழுப் பொறுப்பும் அப்போது என் மீது இருந்தது. நான் ஆழ்ந்த மூச்சு விட்டு, சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்தேன். சுவர்க் கடிகாரத்தின் டிக் டிக் சத்தம் மட்டுமே கேட்டது. ராணுவ இல்லத்தில் உள்ள எனது அறையில், ஒரு சுவரில் ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கின் வரைபடமும், மற்றொரு சுவரில் கிழக்கு கமாண்டின் வரைபடமும் இருந்தன. அவை குறிப்பிட்ட ராணுவ தளங்களை மட்டும் காட்டாத வரைபடங்களாக இருந்தன. ஆனால், அவற்றைப் பார்த்தபோது, ஒவ்வொரு யூனிட் மற்றும் படை அமைப்பின் இருப்பிடத்தையும் நான் கற்பனை செய்து பார்த்தேன்.
எல்லா விதத்திலும் நாங்கள் தயாராக இருந்தோம், ஆனால் நான் உண்மையிலேயே ஒரு போரைத் தொடங்க விரும்பினேனா? நாடு மோசமான நிலையில் இருந்தது, கொரோனா பெருந்தொற்று காரணமாக தடுமாறிக்கொண்டு இருந்தது. பொருளாதாரம் சரிந்துவிட்டது, சர்வதேச விநியோக சங்கிலிகள் துண்டிக்கப்பட்டு இருந்தன. நீண்டகால நடவடிக்கைக்கு தேவையான உதிரி பாகங்கள் போன்றவற்றின் நிலையான விநியோகத்தை நாம் உறுதிப்படுத்த முடியுமா?
உலக அரங்கில் நமது ஆதரவாளர்கள் யார்? சீனா மற்றும் பாகிஸ்தானின் கூட்டு அச்சுறுத்தல் எப்படி இருக்கும்? என நூற்றுக்கணக்கான சிந்தனைகள் என் மனதில் மின்னல் ஓட்டம் போல் பறந்தன. இது ராணுவ போர் கல்லூரியின் மாதிரி அறையில் விளையாடப்படும் போர் விளையாட்டு அல்ல. இது வாழ்வா சாவா சூழ்நிலை. அமைதியாக சிந்தித்த சில நிமிடங்களுக்குப் பிறகு, வடக்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே.ஜோஷியை அழைத்தேன். நாம் முதலில் தாக்குதல் தொடுக்கக் கூடாது, என்று நான் அவரிடம் கூறினேன்.
ஏனென்றால் அது சீனர்கள் போர் செய்வதற்கு ஒரு காரணம் கொடுத்து நம்மை ஆக்கிரமிப்பாளர்களாக சித்தரித்துவிடும். முந்தைய தினம் கூட கயிலாஷ் மலைத்தொடரில் முதலில் சுட்டது சீன ராணுவம்தான். அவர்கள் இரண்டு சுற்றுக்கள் சுட்டனர். நமது மூன்று சுற்று தாக்குதல்கள், ஊடகங்களின் கவனத்தைத் தவிர்த்தது. எதிரே, நம் பீரங்கிகளின் குழல்களை அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வகையில், நம் பீரங்கிகளின் ஒரு பிரிவை நகர்த்தச் சொன்னேன். இது உடனடியாகச் செய்யப்பட்டது, மேலும் சில நூறு மீட்டர் தொலைவில் மேலே சென்றடைந்த சீன பீரங்கிகள் தடத்தில் நின்றன.
அவர்களின் இலகுவான பீரங்கிகளால் நமது பீரங்கிகளுக்கு ஈடு கொடுக்க முடியாது. அது ஒரு விளையாட்டு. சீன ராணுவம் முதலில் கண் சிமிட்டியது. ஆகஸ்ட் 29 - 30 இரவு இடைப்பட்ட காலத்தில் சீன துருப்புகள் மோல்டோவிலிருந்து சூட்டி சாங்லா பகுதிக்கு, பாங்கோங் டசோவின் தென் கரைக்கு நகர்த்தப்பட்டன. மாலைக்கு உள்ளேயே, கைலாஷ் மலைத்தொடர் பகுதியில் சில துருப்புகளை முன்னே நகர்த்தினர். 30 ஆம் தேதி மாலை, இந்திய ராணுவம் பாங்கோங் டசோவின் வடக்கு மற்றும் தென் கரைகளிலும், கைலாஷ் மலைத்தொடரிலும் வலுவான நிலையில் இருந்தது.
சீனா கயிலாஷ் மலைத்தொடர் பகுதியில் சில துருப்புகளை முன்னே நகர்த்தி, நமது இருப்பிடங்களில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் நிறுத்தினர். சீன ராணுவ இருப்பிடங்கள் குறைந்த உயரத்தில் இருந்ததால் நேரடியாக நமது கண்காணிப்பின் கீழ் இருந்தன. அதனால், அவர்கள் நமக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, ஆனால் அவர்கள் வலுவாக முன்னே வந்து நமது பகுதிகளை துப்பறியவோ அல்லது சூழ்ந்து கொள்ளவோ முயற்சித்தால், நாம் பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும். சூழ்நிலை பதற்றமாகவும் இருந்தது.
ஆகஸ்ட் 31 ஆம் தேதி பகலில் சீனா தரப்பில் பக்கத்தில் நிறைய நடமாட்டம் இருந்தது. அதே சமயத்தில் ராணுவம் தனது நிலையை உறுதிப்படுத்தியது. மாலைநேரம் நெருங்க, மோல்டோவில் உள்ள அவர்களின் முகாமில் கவசத்தின் இயக்கம் நடைபெற்றது. இதைப் பார்த்து, தாரா பேஸில் உள்ள நமது பீரங்கிகளும் ரேச்சின் லாவுக்கு மேலே செல்ல உத்தரவிடப்பட்டது. மற்ற சில இடங்களிலும் சீன துருப்புகள் திரட்டப்பட்டதைக் கண்டோம்.
ஆகஸ்ட் 31 ஆம் தேதி மாலை 2015 மணிக்கு, ஜோஷி என்னை அழைத்தார், நிலைமை குறித்து கவலைப்பட்டார். காலாட்ப்படை ஆதரவுடன் நான்கு பீரங்கிகள் மெதுவாக ரேச்சின் லா நோக்கி செல்லத் தொடங்கியதாக அவர் தெரிவித்தார். அதனால் எந்த விளைவும் ஏற்படவில்லை. மேலிடத்தில் இருந்து அனுமதி கிடைக்கும் வரை பதில் தாக்குதல் வேண்டாம் என்று எனக்கு தெளிவான உத்தரவுகள் இருந்தன. அடுத்த சில மணி நேரத்தில், பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராணுவத் தலைமைத் தளபதி இடையே ஏராளமான தொலைபேசி உரையாடல்கள் நடந்தன.
ஒவ்வொருவரிடம் 'என் உத்தரவுகள் என்ன?' என்று கேட்டேன். இரவு 9.10 மணிக்கு வடக்கு கமாண்டில் இருந்து மீண்டும் அழைப்பு வந்தது. பீரங்கிகள் தொடர்ந்து முன்னேறி, உச்சியிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவாக இருந்தன. 9.25 மணிக்கு மீண்டும் பாதுகாப்பு அமைச்சரை அழைத்தேன். சமீபத்திய தகவலை சொல்லி, மீண்டும் தெளிவான வழிகாட்டலை கேட்டேன். சூழ்நிலை பதற்றமாக இருந்தது. தொலைபேசி இணைப்புகள் அதிர்ந்தன. இதற்கிடையில், ஹாட்லைன் செய்திகள் பரிமாற்றம் நடைபெற்றது.
சீனா ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் லியு லின் இரு தரப்பினரும் மேலும் நகர்வதை நிறுத்திவிட வேண்டும் என்றும், இரு உள்ளூர் தளபதிகளும் மறுநாள் காலை 9.30 மணிக்கு சந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை 10.00 மணிக்கு அழைத்து இந்த செய்தியைப் பகிர்ந்து கொண்டேன். நான் ஃபோனை வைத்தவுடன், வடக்கு ராணுவ தளபதி ஜோஷி 10.10 மணிக்கு மீண்டும் ஒருமுறை அழைத்தார்.
பீரங்கிகள் மீண்டும் முன்னேறி, இப்போது சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளன என்று அவர் கூறினார். சீன ராணுவத்தை நிறுத்துவதற்கான ஒரே வழி ராணுவப் பீரங்கிகளால் தாக்குதல் தொடுப்பதுதான் என்று ஜோஷி பரிந்துரைத்தார், அவை தயாராகி காத்திருப்பதாக அவர் கூறினார். எனக்கு நெருக்கடி அதிகரித்தது" என்று தன்னுடைய உணர்வுகளை அவர் பகிர்ந்து உள்ளார்.












Click it and Unblock the Notifications