புது டெக்னிக்.. தோனி போன்ற பிரபலங்களின் பான்கார்டு விவரங்களை வைத்து லட்சக்கணக்கில் மோசடி..பரபர தகவல்
பிரபலங்களின் பான்கார்டு விவரங்கள் மூலம் கிரெடிட் கார்டுகளை வாங்கி நூதன முறையில் டெல்லியில் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது.
டெல்லி: கிரிக்கெட் வீரர் தோனி, பாலிவுட் நட்சத்திரங்களான அபிஷேக் பச்சன், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்களின் பான்கார்டு விவரங்கள் மூலம் கிரெடிட் கார்டுகளை வாங்கி நூதன முறையில் டெல்லியில் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. லட்சகணக்கில் மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட மோசடி கும்பலை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடி எப்படி அரங்கேற்றப்பட்டது என்ற விவரங்களை இங்கே காணலாம்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்போது மக்களின் நிதி சார்ந்த பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் மயமாகி வருகின்றன.
இதன் காரணமாக தற்போது சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. செல்போனில் தொடர்பு கொண்டு ஏடிஎம் கார்டு விவரங்கள் மற்றும் ஓடிபி விவரங்களை பெற்று அதன் மூலம் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடுவது உள்ளிட்ட பல்வேறு யுக்திகளில் பணத்தை திருடும் கும்பல்கள் ஒரு பக்கம் செயல்பட்டு வருகின்றன.

பிரபலங்களின் பெயரில் கிரெடிட் கார்டு
தற்போது இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் பிரபலங்களின் பான்கார்டு விவரங்களை ஜிஎஸ்டி அடையாள எண்கள் மூலமாக திரட்டி கண்டுபிடித்து அதன் மூலம் கிரெடிட் கார்டுகளை வாங்கி நூதன முறையில் டெல்லியில் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. ஜி.எஸ்.டி அடையாள எண்கள் மூலமாக பான்கார்டு விவரங்களை பெற்ற இந்த கும்பல் அதன் மூலமாக பிரபலங்களின் பெயர்களிலேயே கிரெடிட் கார்டுகளை புனேவை சேர்ந்த பின்டெக் நிறுவனத்தின் " ஒன்கார்டு' நிறுவனத்தின் மூலம் பெற்று இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது.

தோனி பெயரில் மோசடி
பாலிவுட் நட்சத்திரங்களான அபிஷேக் பச்சன், ஷில்பா ஷெட்டி, மாதுரி திக்ஷித், எம்ரான் ஹஷ்மி மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி ஆகியோரின் பெயரிலும் கிரெடிட் கார்டுகளை வாங்கி இந்த மோசடி நடைபெற்றுள்ளது. இந்த மோசடியை கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனம் கண்டு பிடிப்பதற்கு முன்பாகவே மோசடி கும்பல் ரூ.21.32 லட்சம் மதிப்பில் சில பொருட்களை வாங்கியிருக்கின்றனர். மோசடி குறித்து அறிந்ததும் உடனடியாக டெல்லி போலீசாருக்கு கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனம் தகவல் கொடுத்தது.

5 பேர் கைது
இதையடுத்து, துரிதமாக செயல்பட்ட டெல்லி போலீசார், நூதன முறையில் சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் புனித், முகம்மது ஆசிப், சுனில் குமார், பங்கஜ் மிஷார் மற்றும் விஸ்வ பாஸ்கர் ஷர்மா ஆகியோர் என்பது அடையாளம் தெரிந்தது. 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலி பான் கார்டுகளை பெற்று
இந்த மோசடி எப்படி நடைபெற்றது என்று டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:- பிரபலங்களின் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் ஆன்லைனில் எளிதாக கிடைப்பதால் அதை வைத்து மோசடியாக பான் கார்டுகளை பெற்று அதில் தங்கள் புகைப்படங்களையும் இணைத்து இருக்கின்றனர். இதன் மூலம் அபிஷேக் பச்சனின் பான் கார்டு எண்களும் பிறந்த தேதியும் இருக்கும் படியும் புகைப்படங்கள் மட்டும் தங்களின் புகைப்படங்கள் பான் கார்டில் இருக்கும்படி போலி பான் கார்டுகளை பெற்று இருக்கின்றனர்.

ஆன்லைனில் ரிசர்ச் செய்து கண்டுபிடித்து..
இதே பாணியில் ஆதார் கார்டு விவரங்களையும் சேர்த்து கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பித்து இருக்கின்றனர். கிரெடிட் கார்டு விண்ணப்பிப்பதில் இருக்கும் சிறிய குறைபாடுகளை பல மாதங்களாக ஆன்லைனில் ரிசர்ச் செய்து கண்டறிந்து இந்த நூதன மோசடியில் மேற்கண்ட ஐந்து பேரும் ஈடுபட்டுள்ளனர். பின்னர் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்து உள்ளனர். ஒன்கார்டு நிறுவனமும் 10 லட்சம் வரம்பிலான கடன் வரம்பு கொண்ட கார்டுகளை வழங்கியுள்ளது. கார்டுகளை பெற்ற பிறகு கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் இருந்ததுள்ளனர். அதன்பிறகு ஒன்கார்டு நிறுவனம் அளித்த புகாரையடுத்தே பிரபலங்களின் பான் கார்டு விவரங்களை பயன்படுத்தி இப்படி ஒரு மோசடி அரங்கேறியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications