'சாரி ராகுல்.. உங்கள புரிஞ்சுக்காம திட்டிட்டோம்..' ட்விட்டரில் டிரெண்டாகும் #RahulWasRight ஹேஷ்டேக்
டெல்லி: இந்தியாவுடனான ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகார் குறித்து பிரான்ஸ் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், #RahulWasRight என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.
இந்திய விமானப் படைக்குக் கடந்த 1996ஆம் ஆண்டி ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்ட சுகோய் போர் விமானங்களுக்குப் பிறகு புதிய போர் விமானங்கள் எதுவும் வாங்கப்படவில்லை. புதிய போர் விமானங்களை வாங்க வேண்டும் என விமானப்படை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இதைத் தொடர்ந்து 126 ரபேல் போர் விமானங்களை வாங்கக் கடந்த 2012ஆம் ஆண்டு வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2015இல் அரசு முறையைப் பயணமாக பிரான்ஸ் சென்ற மோடி, காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.
|
ரபேல் ஒப்பந்தம்
மேலும், புதிய ஒப்பந்தம் ஒன்றும் போடப்பட்டது. அதன்படி 36 ரபேல் போர் விமானங்கள் ரூ 59 ஆயிரம் கோடிக்கு வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த புதிய ஒப்பந்தத்தில் மாபெரும் முறைகேடு நடந்துள்ளதாகவும் ராகுல் காந்தி கடும் விமர்சனங்களை முன் வைத்திருந்தார். இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கிலும் ரபேல் ஒப்பந்தத்தில் எவ்வித முறைகேடும் இல்லை என்றே தீர்ப்பு வழங்கப்பட்டது.
|
பிரான்ஸ் முன்னாள் அதிபர்
இருப்பினும், அவ்வப்போது ரபேல் ஒப்பந்தம் பற்றிய செய்திகள் வெளியாக அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட போது பிரான்ஸ் அதிபராக இருந்த பிரான்கோய்ஸ் ஹோலன்டே சில ஆண்டுகளுக்கு முன், "எங்களுக்கு ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தினை தேர்வு செய்வதைத் தவிர வேறெந்த வாய்ப்புகளையும் இந்திய அரசு தரவில்லை" என்று கூறியிருந்தார். இது அப்போதே பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.

ட்விட்டர் டிரெண்டிங்
இந்நிலையில் ரபேல் ஒப்பந்தத்தில் சிலருக்குச் சாதமாக நடந்து கொள்ளப்பட்டதாகவும் இதில் ஊழல் நடந்துள்ளதாக என்பது குறித்து பிரான்ஸ் நாட்டின் தேசிய நிதி நடவடிக்கை அலுவலகம் விசாரணை தொடங்கியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது ஆளும் பாஜக அரசைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், ட்விட்டரில் தற்போது #RahulWasRight என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டிங்கில் உள்ளது.

ராகுல் காந்தி
ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாகக் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வந்தார் என்றும் அவர் கூறியது சரி என்பதை நிரூபிக்கும் வகையிலேயே பிரான்ஸ் நாட்டில் எடுக்கப்படும் நடவடிக்கை உள்ளதாகப் பலரும் கூறி பதிவிட்டு வருகின்றனர். மேலும், ரபேல் ஒப்பந்தத்தில் எவ்விதமா ஊழலும் நடைபெறவில்லை என்றும் ராகுல் திட்டமிட்டு பொய்யான தகவல்களைப் பரப்புவதாகவும் அப்போது பாஜக தலைவர்கள் பேசிய வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

பழைய கருத்துகள்
இன்னும் சிலர் ரபேல் மட்டுமில்லை பல்வேறு விஷயங்களில் ராகுல் காந்தி கூறியதே நடந்துள்ளதாகவும் பதிவிட்டு வருகின்றனர். மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அதை முதலில் எதிர்த்தவர்களில் ராகுல் காந்தியும் ஒருவர் என்றும் அப்போது அவரது நிலைப்பாட்டைப் பலரும் எதிர்த்தாலும் ராகுல் கூறியதே நடந்ததாக ட்வீட் செய்து வருகின்றனர்,

கொரோனா வைரஸ்
இதுதவிர கொரோனா தொடங்கிய போது அரசை முதலில் எச்சரித்தவர் ராகுல் காந்தி தான் என்றும் அவரது பழைய ட்வீட்டை சிலர் மேற்கோள்காட்டி வருகின்றனர். மேலும், இந்திய மக்களுக்கு முதலில் தடுப்பூசி போடாமல் ஏற்றுமதி செய்வது மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பதை இந்தாண்டு ஜனவரி மாதமே கூறியவர் ராகுல். இப்படி ராகுல் காந்தி கூறுவது பெரும்பாலும் சரியாகவே உள்ளதாகவும் பொதுமக்கள் தான் அதை புரிந்து கொள்ளவில்லை என்றும் #RahulWasRight ஹேஷ்டேக்-இல் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications