மிகச்சிறப்பு.. உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணைகள் நேரடி ஒளிபரப்பு.. செப் 27 முதல் அமல்
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் அனைத்து அரசியல் சாசன அமர்வு விசாரணைகளும் செப்டம்பர் 27 ம் தேதி முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அனைத்து நீதிபதிகளும் ஒருமனதாக ஒப்புக்கொண்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் என்வி ரமணா. இவர் கடந்த மாதம் இறுதியில் ஓய்வு பெற்றார். இதையடுத்து அவரது கடைசி பணிநாளில் நடைபெற்ற வழக்குகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.
இது இந்திய நீதித்துறையில் புதிய மைல்கல்லாகும். ஏனென்றால் உச்சநீதிமன்ற வரலாற்றில் வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

உச்சநீதிமன்ற நேரடி ஒளிபரப்பு
இந்தியாவில் 2018ல் உச்ச நீதிமன்றத்தின் நடைமுறைகளை கொள்கையளவில் நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதுதொடர்பான பொதுநல வழக்கை விசாரணை நடத்திய நீதிமன்றம் 2018 செப்டம்பரில் அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் இந்த உத்தரவை பிறப்பித்தது. இருப்பினும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைமுறைக்கு வராமல் இருந்தது. 5 ஆண்டுகளுக்கு பிறகு 2022 செப்டம்பர் 26ம் தேதி முதல் முறையாக வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அரசியல் சாசன அமர்வு வழக்கு
அதன் தொடர்ச்சியாக உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யுயு லலித் நியமிக்கப்பட்டார். இவரும் உச்சநீதிமன்றத்தின் வழக்கு நடைமுறையில் மாற்றங்கள் கொண்டு வர தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் தான் தற்போது உச்சநீதிமன்றத்தின் அனைத்து அரசியல் சாசன அமர்வு விசாரணைகளும் செப்டம்பர் 27 ம் தேதி முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

ஆலோசனைக்கு பிறகு அறிவிப்பு
கடந்த வாரம் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், தலைமை நீதபதி யுயு லலித்துக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். "பொது மற்றும் அரசியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்'' என கோரிக்கை வைத்திருந்தார். இதுதொடர்பாக நேற்று அனைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளுடன் தலைமை நீதிபதி யுயு லலித் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அனைத்து அரசியல் சாசன அமர்வு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்வது பற்றி விவாதிக்கப்பட்டது. இதனை நீதிபதிகள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக தான் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிஏஏ வழக்கு
இந்த புதிய நடைமுறையின் மூலம் குடியுரிமை திருத்த சட்டம்(சிஏஎ), ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது பிரிவு ரத்தை எதிர்க்கும் வழக்கு, பொருளாதார அடிப்படையிலான உயர் சாதியிருனருக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணை அனைத்து மக்களும் நேரடியாக பார்க்க முடியும். தற்போதைய நிலவரப்படி டெல்லி, ஒடிசா, குஜராத், கர்நாடகா, ஜார்கண்ட், பாட்னா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய உயர் நீதிமன்றங்கள் தங்களுக்கென யூடியூப் சேனல்களை துவங்கி உள்ளன. இந்த யூடியூப்களில் வழக்கு விசாரணைகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. இதேபோல் சொந்த தளத்தை உச்சநீதிமன்றம் விரைவில் துவங்க உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications