வாழ்க்கை ஒரு வட்டம்.. பேப்பர் லீக்கிற்காக போராடிய தர்மேந்திர பிரதானுக்கு அதுவே எதிராக திரும்பியது
டெல்லி: வாழ்க்கை ஒரு வட்டம் சார்... எப்படி சொல்றீங்க.. 1997-ஆம் ஆண்டில், நமது நாட்டின் உயர்கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஒடிசாவில் ஒரு இளம் மாணவர் தலைவராக இருந்தார். அப்போது ஒடிசா தலைமைச் செயலகத்திற்கு வெளியே நின்று, வினாத்தாள் கசிவுக்கு எதிராக அவர் உரத்த குரலில் போராடினார். அன்று காவல்துறையினர் அவரை கடுமையாகத் தாக்கினர்.
ஆனால் இன்று, அவர் தான் இந்தியாவின் கல்வியை வடிவமைக்கும் உயர் கல்வி அமைச்சராக உயர்ந்துள்ளார். முக்கிய கல்வி அமைச்சராக உயர்ந்துள்ளார். ஆச்சரியம் என்னவென்றால், வினாத்தாள் கசிவுப் பிரச்சனைகள் மீண்டும் வந்துவிட்டது. இப்போது மக்கள் அவருக்கு எதிராகவும் போராடுகிறார்கள்! வாழ்க்கை சில நேரங்களில் விசித்திரமானது. இப்போது சொல்லுங்கள் வாழ்க்கை வட்டம் தானே.. முழுமையாக பார்ப்போம்.

இன்று டெல்லி ஜந்தர் மந்திரில் கடும் குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் யாருக்கு எதிராக போராடுகிறார்கள் என்றால் தர்மேந்திர பிரதானை எதிர்த்து தான்..பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தர்மேந்திர பிரதானை பதவி நீக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என்றே போராடுகிறார்கள். நீட் தேர்வு கேள்வித்தாள் கசிவு மற்றும் அதனை தொடர்ந்து நடந்த மறுதேர்வால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் கல்வி உரிமைக்காக போராடி வருகிறார்கள். இவர்கள், பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று ஆசைப்படும் தர்மேந்திர பிரதான், பெரும் தலைவராக உருவெடுத்ததும் ஒரு பேப்பர் லீக் பிரச்சனைக்காத்தான் என்பது ஆச்சரியமானது.
1997-இல், தர்மேந்திர பிரதான் ஒடிசா மாநிலத்தில் ஏபிவிபியின் தேசியச் செயலாளராக இருந்தார்; அப்போது பாரதிய ஜனதா கட்சியில் இணையவிருந்த தருணம் அது. ஒடிசாவில் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாகப் பெரிய அளவில் போராட்டம் நடந்தது. அதில் இவரும் பங்கேற்றார்; அப்போது காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டார்.

இது பற்றி அவருடன் போராட்டத்தில் பங்கேற்ற சக ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி அளித்த ஊடக பேட்டியில், "நாங்கள் 1997-இல் வினாத்தாள் கசிவுக்கு எதிராக ஒடிசா தலைமைச் செயலகத்திற்கு முன்பாக பட்நாயக்கின் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினோம். சுமார் 1,500 மாணவர்கள் எங்களுடன் இணைந்தனர். போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றபோதிலும், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. அப்போது தர்மேந்திர பிரதான் கடுமையாகத் தாக்கப்பட்டார்; அவருக்கு எலும்பு முறிவுகளும் ஏற்பட்டன. என்றார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் இந்த பேட்டியை வெளியிட்டுள்ளது. இது சமூக வலைதளங்கள் முழுக்க தற்போது பேசுபொருளாகி உள்ளது.
காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் ஜென் சி மாணவர் அமைப்பினர் இணைந்து டெல்லியில் தர்மேந்திர பிரதானை எதிர்த்து போராடி வருகிறார்கள். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியே ஆக வேண்டும் என்று அவர்கள் பிடிவாதமாக உள்ளனர். மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. ஆனால் மாணவர்கள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகாமல் நாங்கள் ஓய மாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். இதனால் மத்திய அரசு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அடுத்த என்ன செய்ய போகிறது என்ற கேள்விகள் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
