ஜி 20.. டெல்லி பாரத மண்டபத்தில் உலக தலைவர்களை கவரும் 27 அடி உயர நடராஜர் சிலை.. தமிழர் பெருமை பேசும்
டெல்லி: டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெறவுள்ள பாரத் மண்டப வளாகத்தில் 27 அடி உயரத்தில் 8 வகை உலோகங்களால் ஆன நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது. உலகத்தலைவர்களை கவரப்போகும் இந்த பிரம்மாண்ட சிலை பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. இது தமிழ்நாட்டில் வடிவமைக்கப்பட்டது என்பது சிறப்பம்சம்.
உலகின் பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ளும் ஜி20 மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இந்தியாவில் நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த மாநாடு நடக்க உள்ளது. மாநாடு நடக்கும் பாரத் மண்டப வளாகத்தில் 27 அடி உயரத்தில் வெண்கலத்தால் ஆன நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி நேஷனல் சென்டர் ஆஃப் ஆர்ட் சார்பில் நிறுவப்பட்டுள்ள இந்த சிலை தயாரிக்கும் பணியை தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலையில் ஸ்ரீதேவசேனாதிபதி சிற்பக் கூடத்திற்கு தரப்பட்டது. இச்சிற்பகூட ஸ்தபதிகளான தேவ.ராதாகிருஷ்ணன், தேவ.ஸ்ரீகண்டன், தேவ.சுவாமிநாதன் உள்ளிட்டோர் இந்த சிலையை வடிவமைத்தனர்.
சிவபெருமானின் நடராஜ ரூபம் என்பது நடன கலையின் தெய்வமாக போற்றப்படுவதாகும். ஆனால் நடராஜர் ரூபம் என்பது மதம், ஆன்மிகம் என்பதைத் தாண்டி அறிவியலுடன் தொடர்புடையதாகும். சிதம்பரம் நடராஜர் கோவிலின் மூலவராக நடராஜர் இருக்கிறார். சபாநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் ஆகாயத்தலமாகவும் இந்த ஆலயம் போற்றப்படுகிறது. இந்த ஆலயம் மனித உடலுடன் தொடர்புடையதாக இந்த கோவில் அமைப்பட்டுள்ளது என்பது தான் தனிச்சிறப்பாகும்.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் தலைமையகத்திலும் 17 அடி உயர நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது. அறிவியல், விண்வெளி ஆகியவற்றுடன் தொடர்புடையதை குறிக்கும் வகையில் டெல்லியில் நடக்க உள்ள ஜி20 மாநாட்டு வளாகத்தில் உலகின் மிக உயரமான நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

பாரம்பரிய முறையில் அஷ்ட தாதுக்கள் எனப்படும் தங்கம், வெள்ளி , செம்பு, ஈயம், துத்தநாகம், தகரம், இரும்பு, பாதரசம் ஆகிய எட்டு தாதுக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இந்த அஷ்ட தாதுக்களும் சாவித்விக முறையை சேர்ந்தது என்பதால் இவற்றை சிலை செய்ய பயன்படுத்துகிறார்கள். இந்த சிலையின் மதிப்பு ரூ.10 முதல் 12 கோடிகள் என சொல்லப்படுகிறது. பொதுவாக இந்து மத ஆலயங்களில் பஞ்ச லோக உலோகத்தால் ஆன தெய்வ சிலைகள் 5 வகை உலோகங்களைப் பயன்படுத்தி தான் செய்யப்படும். சிற்ப சாஸ்திரப்படி, உலோகத்தால் ஆன குபேரர், விஷ்ணு, கிருஷ்ணர், ராமர், முருகன், துர்கை மற்றும் லட்சுமி சிலைகள் செய்யும் போது அஷ்ட தாதுக்களை பயன்படுத்தக் கூடாது என்பது விதி.
சோழர் காலத்தில் இருந்து வழி வழியாக பாரம்பரிய சிற்பங்களை உருவாக்கி வரும் சுவாமிமலையை சேர்ந்த 61 வயதான ஸ்ரீகந்த ஸ்தபதி, தனது சகோதரர்கள் ராதாகிருஷ்ண ஸ்தபதி மற்றும் சுவாமிநாத ஸ்தபதி ஆகியோருடன் சேர்ந்து சிலையை உருவாக்கினார். சிற்ப சாஸ்திர முறையில், சரியான முறையில் இந்த நடராஜர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. 34 தலைமுறையாக இவர்கள் சிலை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சாவூர் பிரகதீஷ்வரர் ஆலயம் தொடங்கி சோழர் கால ஆலய சிற்பங்களை வடிவமைத்துள்ளனர்.
இந்த நடராஜர் சிலை தான் இன்றைய தேதியில் உலகின் மிக உயரமான நடராஜர் சிலையாகும். இந்த சிலையில் மொத்த எடை 18 டன் ஆகும். தமிழகத்தில் செய்யப்பட்ட இந்த சிலை, டெல்லிக்கு வெறும் நான்கு நாட்களில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சிலையை செய்வதற்கு ஏழு மாதங்கள் செலவிடப்பட்டுள்ளது. ஒரே வார்ப்பாக இந்த சிலை செய்யப்பட்டுள்ளதாக ஸ்தபதி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

27 அடி உயரம் ,21 அடி அகலம், 18 டன் எடையில் பித்தளை ,செம்பு ,இரும்பு ,ஈயம் ,தங்கம் ,வெள்ளி ,வெள்ளியம், பாதரசம் ஆகிய எட்டு உலோகங்களை கொண்ட அஷ்ட தாதுக்களால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தவிர 8 டன் எடையில் பீடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலையானது கடந்த 28ஆம் தேதி பாதுகாப்புடன் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சிலையைப் பற்றி பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பாரத மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான நடராஜர் சிலை, நமது வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை கண்முன்னே நிறுத்துகிறது என்று மோடி தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஜி20 உச்சி மாநாட்டிற்காக உலக நாடுகள் ஒன்று கூடும்போது, இது இந்தியாவின் பழங்கால கலைத்திறன் மற்றும் பாரம்பரியங்களுக்கு ஒரு சான்றாக அமையும் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications