பாஜகவை எதிர்கொள்ள இதுதான் ஒரே வழி.. காங். ஜி 23 தலைவர்கள் முக்கிய முடிவு.. சோனியாவிற்கு அறிவுரை
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல் தோல்வியை தொடர்ந்து நேற்று காங்கிரஸ் கட்சியின் ஜி 23 தலைவர்கள் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தினர். காங்கிரஸ் கட்சியில் முக்கிய சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளால் காங்கிரஸ் கட்சிக்குள் கடுமையான கோஷ்டி மோதல் நிலவி வருகிறது. உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா என்று ஐந்து மாநிலங்களில் காங்கிரஸ் கடுமையான தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த தோல்வியை தொடந்து காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருக்கும் கபில் சிபல் உட்பட ஜி 23 தலைவர்கள் மறுநாளே அவசர கூட்டம் நடத்தினர். காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இவர்கள் ஆலோசனை செய்தனர்.

முடிவு - ஜி 23 எதிர்ப்பு
இதையடுத்து உடனே சோனியா காந்தி தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடர்கிறார் என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இதை ஜி 23 தலைவர்கள் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நேற்று ஜி 23 தலைவர்கள் மீண்டும் ஒன்றாக கூடி ஆலோசனை செய்தனர். இந்த குழுவில் இருந்த ஜிதின் பிரசாத், யோகானந்த சாஸ்திரி ஆகியோர் ஏற்கனவே காங்கிரசை விட்டு வெளியேறிவிட்டனர்.

புதிய வரவு
இதனால் 21 தலைவர்கள்தான் எப்போதும் இந்த கூட்டத்திற்கு வருவார்கள் என்றாலும் நேற்று கூடுதலாக சிலர் வந்து இருந்தனர். புபேந்திர சிங் ஹூடா, ராஜ் பாப்பர், ஷங்கர் சிங், மணி சங்கர் ஐயர் ஆகியோர் இந்த கூட்டத்தில் புதிதாக கலந்து கொண்டனர். இவர்கள் ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட ஜி 23 அதிருப்தியாளர்கள் அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கபில் சிபல், சசி தரூர், ஆனந்த் சர்மா, மனிஷ் திவாரி, பூபிந்தர் ஹூடா, ராஜிந்தர் கவுர் பட்டல், அகிலேஷ் பிரசாத் சிங், பிருத்விராஜ் சவான், பி.ஜே. குரியன், மணி சங்கர் ஐயர், குல்தீப் சர்மா மற்றும் ராஜ் பப்பர் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான காரணம், தலைமையிடம் இருக்கும் பிரச்சனை என்று பல விஷயங்களை இந்த கூட்டத்தில் இவர்கள் ஆலோசனை செய்தனர்.

முடிவு
நேற்று இந்த கூட்டம் டெல்லியில் குலாம் நபி ஆசாத் வீட்டில் நடைபெற்றது. கபில் சிபல் வீட்டில்தான் முதலில் கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால் அவர், காங்கிரஸ் கட்சி ஒரு வீட்டின் கட்சியாக இருக்க கூடாது. அது எல்லோருக்குமான கட்சியாக இருக்க வேண்டும் என்று கூறிய கருத்து சர்ச்சையானதால், அவரின் வீட்டில் கூட்டம் நடக்கவில்லை. இந்த கூட்டத்தின் முடிவில், காங்கிரஸ் கட்சியில் எல்லோருக்கும் வாய்ப்பு அளிக்க கூடிய, ஒருங்கிணைந்த தலைமை வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

தலைமை
அனைத்து மட்டங்களிலும் கூட்டு முடிவு எடுக்க கூடிய வகையில், அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் தலைமையை காங்கிரசில் கொண்டு வர வேண்டும். அது மட்டுமே நாம் முன்னேறி செல்வதற்கு ஒரே வழி. பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சியை அனைத்து மட்டங்களிலும் வலுப்படுத்த வேண்டும். அதேபோல் காங்கிரஸ் கட்சியில் உள்ள தலைவர்கள் ஒரே கொள்கை கொண்ட வெளியே இருக்கும் நபர்களிடம் பேச வேண்டும்.

ஒரு குடை
நம்முடைய கொள்கை கொண்ட தலைவர்கள் வெளியே இருந்தாலும் அவர்களிடம் பேச வேண்டும். அவர்களுக்கான மேடைகளை நாம் அமைத்து தர வேண்டும். இதுவே 2024ல் நாம் தேர்தலை எதிர்கொள்ள ஒரே வழியாக இருக்கும். எங்கள் கூட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிவிப்போம் என்று இந்த கூட்டத்தின் முடிவில் ஜி 23 தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications