"தகுதியே இல்லை.." காங்கிரஸ் வேட்பாளர்களை மிக கடுமையாக சாடிய காந்தியின் பேரன்! இப்படி சொல்லிட்டாரே
டெல்லி: லோக்சபா தேர்தலுக்காகக் காங்கிரஸ் இதுவரை 4 கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், காந்தியின் கொள்ளு பேரனான துஷார் காந்தி திடீரென காங்கிரஸ் வேட்பாளர்களைச் சாடியுள்ளார்.
நமது நாட்டில் லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த முறை லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதில் தேசியளவில் பார்க்கும் போது பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி இருக்கிறது.
இந்தியா கூட்டணி: மீண்டும் பாஜக வெல்லக்கூடாது என்பதற்காக பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளனர். இந்த கூட்டணி இருந்து நிதிஷ்குமார், மம்தா ஆகியோர் வெளியேறினாலும் மற்றவர்கள் கூட்டணியில் இணைந்தே பயணித்து வருகிறார்கள். சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, திமுக, சரத் பவார் தரப்பு, தாக்கரே தரப்பு எனப் பல கட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன.
இதில் வரிசையாகப் பல மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்து வேட்பாளர்களை அறிவித்து காங்கிரஸ் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை இதுவரை நான்கு கட்ட வேட்பாளர்கள் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது. நேற்று நான்காம்கட்ட வேட்பாளர் லிஸ்டில் தமிழகத்தில் இருந்து போட்டியிடும் சில வேட்பாளர்கள் உட்பட 45 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
காந்தியின் கொள்ளு பேரன்: காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் லிஸ்டிற்கு பலரும் பலவித கருத்துகளைக் கூறி வருகின்றனர்.இதற்கிடையே காங்கிரஸ் வேட்பாளர்கள் தொடர்பாக மகாத்மா காந்தியின் கொள்ளு பேரனான துஷார் காந்தி மிகவும் காட்டமான சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். காங்கிரஸின் வேட்பாளர் தேர்வு சில தொகுதிகளில் மிக மோசமாக இருப்பதாக அவர் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள சில வேட்பாளர்கள் தேர்வு மிக மோசமாக இருக்கிறது. சிறந்த வேட்பாளர்களைக் காங்கிரஸ் கட்சியால் கண்டறிய முடியவில்லை என்பது சோகமானது. ஆனால் என்னால் என்ன செய்ய முடியும்.. மோசமான பாஜக அரசை வீழ்த்த நான் இந்தியக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த போஸ்ட் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதேநேரம் அவர் எந்த தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு மோசமாக இருக்கிறது என சொல்கிறார் என்பது குறித்து அவர் வெளிப்படையாகச் சொல்லவில்லை.
லோக்சபா தேர்தல்: இந்த முறை லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் வரும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கிறது. அதில் தான் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து 2ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி நடக்கும் நிலையில், 3ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 7ஆம் தேதியும் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 13இல் நடக்கிறது. ஐந்து மற்றும் ஆறாம் கட்ட தேர்தல் முறையே மே 13ஆம் மற்றும் மே 25இல் நடக்கும் நிலையில், கடைசிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications