கங்கை நதியில் இப்தார் விருந்து.. சிக்கன் பிரியாணி சாப்பிட்டு ரீல்ஸ் போட்ட 14 இளைஞர்கள் கைது
லக்னோ: கங்கை நதி படித்துறையில் இப்தார் விருந்து வைத்து சிக்கன் பிரியாணி சாப்பிட்டு வீடியோ போட்டு சர்ச்சையில் சிக்கிய இளைஞர்கள் 14 பேரை உத்தர பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். இன்ஸ்டாவில் அதிக ஃபாலோயர்களை பெறுவதற்காக வீடியோ எடுத்து இளைஞர்கள் பதிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
உத்தர பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமாக வாரணாசி உள்ளது. இங்கு தான் கங்கை நதியும் உள்ளது. கங்கை நதியில் குளித்தால் பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான யாத்ரிகர்கள் வருகை தந்து மத சடங்குகளை செய்கிறார்கள்.

கங்கை நதிக்கரையில் இப்தார் விருந்து
இந்த நிலையில் தான் இந்துக்களின் புனித தலமாக பார்க்கப்படும் கங்கை நதிக்கரையில் இப்தார் விருந்து வைத்து பிரியாணி சாப்பிட்ட 14 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். கங்கை நதியின் படித்துறையில் படகில் அமர்ந்தபடி பெரிய பானையில் இருந்து சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர்கள் அதை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் ஆகவும் வெளியிட்டிருந்தனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் வாரணாசி போலீசார் 14 பேரையும் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக கோட்வாலி நகர உதவி ஆணையர் விஜய் பிரதாப் சிங் கூறியதாவது:-
13 பேர் இஸ்லாமியர்கள்
கங்கை நதிக்கரையில் பிரியாணி சாப்பிட்டதாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 13 பேர் இஸ்லாமியர்கள் ஆவர். ஒருவர் இந்து மதத்தை சேர்ந்தவர். படகின் உரிமையாளரான அவரையும் சேர்த்து மொத்தம் 14 பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களை பெறுவதற்காக இந்த இளைஞர்கள் கங்கை நதியில் வைத்து சிக்கன் பிரியாணி சாப்பிட்டதோடு அதை வீடியோவாகவும் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். கைதான அனைவரும் 24 முதல் 26 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் ஆவர் என்றார்.
கங்கை நதி
பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் பிரிவு 299 (மத உணர்வுகளை அவமதிக்கும் நோக்கில் செய்யப்பட்ட தீங்கான செயல்கள்) மற்றும் பிரிவு 298 (ஒரு மதத்தை அவமதிக்கும் நோக்கில் வழிபாட்டு இடத்தை சேதப்படுத்துதல் அல்லது அவமதித்தல்) ஆகியவற்றின் கீழ் இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமாக உள்ளது. இங்குள்ள கங்கை நதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான யாத்ரிகர்கள் வருகை தந்து மத சடங்குகளை செய்கிறார்கள். இந்தியா மட்டும் இன்றி உலக அளவிலும் ஆயிரக்கணக்கானவர்கள் இங்கு வருகை தருவதை பார்க்க முடிகிறது.
மத உணர்வுகளை புண்படுத்துவதாக
கங்கை நதியை ஒட்டி சுமார் 80 முதல் 90 படித்துறைகள் உள்ளன. கங்கையில் குளித்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த நிலையில்தான் கங்கை நதிக்கரையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு அதை வீடியோவாக பதிவிட்டது மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருப்பதாக பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர்.
இந்த சூழலில் 14 இளைஞர்களையும் உத்தர பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். அதேவேளையில் போலீசாரின் செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார்.












Click it and Unblock the Notifications