மாட்டு சிறுநீர் மாநிலங்களில் தான் பாஜக ஜெயிக்கும்.. திமுக எம்பி செந்தில் குமார் பேச்சால் சர்ச்சை
டெல்லி: பாஜகவால் இந்தி பேசும் மாநிலங்களில்தான் வெல்ல முடியும் என்று பேசிய திமுக எம்.பி செந்தில் குமார் பேசியதோடு, அந்த மாநிலங்களை மாட்டு மூத்திர மாநிலங்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 3 ஆம் தேதி எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

காங்கிரஸ் கட்சிக்கு தெலுங்கானாவில் மட்டுமே ஆட்சி கிடைத்தது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது. இது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வட மாநிலங்களில் பாஜகவின் மவுசு குறையமால் இருப்பதையே நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு காட்டுவதாக பாஜக ஆதரவாளர்கள் பேசிவருவதைக் காண முடிகிறது.
பாஜக மீது விமர்சனம்: அதேவேளையில், சத்தீஷ்கரில் ஆட்சியை தக்க வைக்கலாம் என பெரிதும் நம்பிய காங்கிரஸ் கட்சிக்கு அங்கும் தோல்வி கிட்டியது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களின் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வருகிறது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக காங்கிரஸ் தனது வியூகத்தை மாற்றி அமைத்து இந்தியா கூட்டணியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள ஆலோசித்து வருகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அங்கும் விவாதத்தின் போது ஆளும் பாஜக எம்.பிக்களும் எதிர்க்கட்சி எம்.பிக்களும் அவ்வபோது காரசாரமாக மோதிக்கொள்வதையும் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் தான் இன்று நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்.பி செந்தில் குமார், இந்தி பேசும் மாநிலங்களில் பாஜக வெற்றி பெறுகிறது என பேசினார்.
மாட்டு சிறுநீர்: அப்போது, இந்தி பேசும் மாநிலங்களை மாட்டு சிறுநீர்கள் (Gau Mutra) என்று விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுக எம்.பி பேசுகையில், "இந்தி பிரதானமாக பேசப்படும் மாநிலங்களில் வெல்வதுதான் பாஜகவின் பலமாக உள்ளது. இந்த மாநிலங்களை நாங்கள் பொதுவாக கவ் மூத்ரா என்று சொல்வோம்" என்றார்.
மேலும், தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜகவால் வெல்ல முடியவில்லை என்றும் செந்தில் குமார் பேசினார். திமுக எம்.பி செந்தில் குமார், இப்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது முதல் முறையல்ல. கடந்த 2022 ஆம் ஆண்டும் தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசும் போது, இந்தி பேசும் மாநிலங்களை கவ் மூத்ரா என்று பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications