நாடாளுமன்ற மாடத்திலிருந்து யாரோ ஒருவர் தவறி விழுந்ததாக தான் நினைத்தோம்! கவுதம சிகாமணி பகிர்ந்த தகவல்
டெல்லி: நாடாளுமன்ற மாடத்திலிருந்து யாரோ ஒருவர் தவறி விழுந்ததாக தான் முதலில் நினைத்தோம் என்றும் பிறகு தான் பாதுகாப்பு விதிமீறல் நடந்திருப்பது தெரிய வந்ததாகவும் கவுதம சிகாமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உள்ள பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அவைக்குள் 2 பேர் குதித்த விவகாரம் தேசிய அளவில் மட்டுமல்ல உலகளவிலும் கவனம் ஈர்த்துள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட டிசம்பர் 13ஆம் தேதி அன்றே இந்த நிகழ்வும் நடந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் என்ன தான் நடந்தது என்பது பற்றி திமுக எம்.பி. கவுதம சிகாமணியிடம் ஒன் இந்தியா கேட்டது. அப்போது அவர் பகிர்ந்து கொண்ட தகவல் வருமாறு;
''1 மணிக்கு மதிய உணவு இடைவேளை. நண்பகல் 12.55 இருக்கும் என நினைக்கிறேன், திடீரென பார்த்தால் கேலரி பக்கம் ஒரே சவுண்ட், யாரோ தவறி விழுந்ததாக தான் முதலில் நினைத்தோம். ஆனால் நடந்தது வேறு, ஒருவர் எல்லா மேசை நாற்காலி மீதும் ஏறி குதித்து சபாநாயகர் இருக்கையை நோக்கி ஓடி வந்தார். அவரைத் தொடர்ந்து இன்னொருத்தர் கேலரியிலிருந்து குதித்து கலர் பாம் போட்டதால் ஒரே மஞ்சள் நிறமாக மாறி புகை படர்ந்தது.''
''இன்னொருவர் ஷூவை கழற்ற முயன்றார், அதற்குள் எம்.பி.க்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அந்த நபரை பிடித்துவிட்டோம். அதன் பிறகு பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளே வந்து அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எல்லாமே 2 அல்லது 3 நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டது. இதனால் என்ன நடந்தது என்பதை இன்னுமே எங்களால் கூறமுடியவில்லை. இன்று நடந்த நிகழ்வை பொறுத்தவரை பாதுகாப்பு விதிமீறல் தான்.''
''செல்போன், கைக்குட்டை உள்ளிட்ட எந்த பொருட்களையும் உள்ளே யாரும் எடுத்து வர அனுமதி கிடையாது. இத்தனைக்கும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவற்றையெல்லாம் மீறி இவர்கள் கலர் பாமை உள்ளே கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால் இது தீவிரமாக விசாரிக்க வேண்டிய விவகாரம். நாடாளுமன்ற உறுப்பினரோ, அமைச்சரரோ பாஸில் கையெழுத்திடவில்லை என்றால் யாராலும் நாடாளுமன்ற மாடத்திற்கு வர முடியாது''. இவ்வாறு கவுதம சிகாமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications