உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக மாறிய இந்தியா.. 3வது இடத்துக்கு எப்போது முன்னேறும்.. குட்நியூஸ்
டெல்லி: உலகின் 4வது பொருளாதார நாடாக இந்தியா மாறி உள்ளது. நம் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி என்பது 4 டிரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதன்மூலம் ஜப்பானை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்து 4வது இடத்தில் நம் நாடு உள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் டேட்டாவை காட்டி நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி பிவிஆர் சுப்பிரமணியம் கூறியுள்ளார். இந்த சாதனையை 3 ஆண்டுகளில் நம் நாடு எட்டி உள்ள நிலையில் 3வது இடத்தில் இருக்கும் ஜெர்மனியை நம் நாட்டால் பின்னுக்கு தள்ள முடியுமா? அந்த நாட்டின் உள்நாட்டு உற்பத்தி எவ்வளவு? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நிதி ஆயோக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பிவிஆர் சுப்பிரமணியம் பங்கேற்றார்.

அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உள்நாட்டு உற்பத்தி பற்றி விளக்கமளித்தார். அப்போது தான் ஜப்பானை பின்னுக்கு தள்ளி நம் நாடு உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறி உள்ளதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிவிஆர் சுப்பிரமணியம் கூறுகையில், ‛‛தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகளின்படி 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருந்தது. இரண்டாவது காலாண்டில் 5.8 சதவீதமாக சரிந்ததோடு, மூன்றாவது காலாண்டில் 6.2 சதவீதமாக உயர்ந்தது. இப்போது நம்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி என்பது 4 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் டேட்டாவின்படி பார்த்தால் அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்து உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. இந்த லிஸ்ட்டில் 4வது இடத்தில் இருந்த ஜப்பானை நாம் முந்திவிட்டோம்'' என்று கூறியுள்ளார்.
இது நம் நாட்டுக்கு கிடைத்த பெருமையான செய்தியாகும். ஏனென்றால் உலகின் பொருளாதாரத்தில் நம் நாட்டை விட அமெரிக்கா, சீனா, ஜெர்மனி மட்டுமே முன்னிலையில் உள்ளது. அதுமட்டுமின்றி தற்போது 4வது இடத்தில் உள்ள சீனாவை நம் நாடு 3 ஆண்டுகளில் பின்னுக்கு தள்ளி உள்ளது. கடந்த 2022 செப்டம்பர் மாதம் நம் நாடு பிரிட்டனை பின்னுக்கு தள்ளி 5வது இடத்தை பிடித்தது. அதன்பிறகு தொடர்ந்து நம் நாட்டின் பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இது பலனளித்த நிலையில் நம் நாடு 3 ஆண்டுகளில் 5வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
மேலும் நிதி ஆயோக்கின் சிஇஓ சுப்பிரமணியம் இன்னொரு தகவலை தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டரை ஆண்டு அல்லது 3 ஆண்டில் நம் நாடு 3வது பொருளாதார நாடாக மாறும் என்று கூறியுள்ளார். இது சாத்தியமா? என்றால் சாத்தியம் தான். ஏனென்றால் தற்போது ஜெர்மனியின் உள்நாட்டு உற்பத்தி என்பது 4.744 டிரில்லியன் டாலராக உள்ளது.
நம்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 4 டிரில்லியனை கடந்து 4.187 டிரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இன்னும் சிறப்பாக நாம் செயல்பட்டால் ஜெர்மனியையும் விரைவில் பின்னுக்கு தள்ளி உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் 3வது இடத்தை பெற முடியும்.
இதனால் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி நம் நாடு விரைவில் 3வது இடத்தை பிடிக்கலாம். அதன்பிறகு 2வது இடத்தில் உள்ள சீனா மற்றும் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவை முந்துவது கூடுதல் காலம் பிடிக்கலாம். ஏனென்றால் இந்த பட்டியலில் உள்ள சீனாவின் உள்நாட்டு உற்பத்தி என்பது 19.231 டிரில்லியன் அமெரிக்க டாலராகவும், அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி என்பது 30.507 டிரில்லியன் டாலராகவும் உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications