உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் 8 லட்சத்தை தாண்டியது- 4வது இடத்தில் இந்தியா
டெல்லி: உலக நாடுகளில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது. அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ, இந்தியா ஆகிய 4 நாடுகளில் மிக அதிகமான கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,510,906 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 8,10,890 ஆகவும் அதிகரித்திருக்கிறது. கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 16,028,149 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா மரணங்களில் அமெரிக்காதான் முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் 1,80,390 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்ததாக பிரேசிலில் 1,14,469 பேர் கொரோனாவால் மரணித்துப் போயினர்.
மெக்சிகோ நாட்டில் கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை 60,254. 4-வது இடத்தில் உள்ள இந்தியாவில் மொத்தம் 57,692 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் 41,429; இத்தாலியில் 35,437; பிரான்ஸில் 30,513 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர்.
கடந்த 2 வாரங்களின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் நாள்தோறும் சராசரியாக 5,900 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதாவது ஒரு மணிநேரத்துக்கு 246 பேரும் ஒவ்வொரு 15 வினாடிக்கும் ஒருவரும் கொரோனாவால் உலக நாடுகளில் உயிரிழக்கின்றனர்.

கடந்த 17 நாட்களில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையானது 7 லட்சத்தில் இருந்து 8 லட்சமாக உயர்ந்துள்ளது. முன்னதாக 17 நாட்களில் கொரோனா மரணங்கள் 6 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக அதிகரித்தது.












Click it and Unblock the Notifications