பிரதமர் அலுவலக அழைப்பின் பேரில் டெல்லி சென்றுள்ள ஆளுநர் ரவி.. என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக ஆளுநர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார். அந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பே, ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள் சிலரை சந்திக்க உள்ளதாகவும், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாவை வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாகவும், கிடப்பில் போட்டு மாநில அரசை செயல்படவிடாமல் தடுப்பதாகவும் குற்றம்சாட்டி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது.

RN Ravi Governor narandara modi

உச்ச நீதிமன்றம் அந்த தீர்ப்பில் தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராததை கடுமையாக கண்டித்தது. அத்துடன் அந்த 10 மசோதாக்களுக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றமே ஒப்புதலும் அளித்தது. அதேபோல் வரலாற்றில் முதல்முறையாக குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவையும் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மத்திய அரசு ஆலோசனை

இந்த தீர்ப்பை எதிர்த்து குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கரே (இவர் தான் மாநிலங்களவை தலைவர் ஆவார்) கடுமையான கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். எனினும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா அல்லது அவசரச் சட்டம் பிறப்பிப்பதா என்பது குறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.. பல்வேறு சட்ட வழிகள் குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.


குடியரசு துணைத் தலைவர்

இது தொடர்பாக விவாதிக்க நேரில் வருமாறு கடந்த ஏப்ரல் 17ம் தேதி மத்திய அரசு ஆளுநர் ரவிக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த ஏப்.17-ம் தேதி மாலை ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி சென்றார். அங்கு சட்ட நிபுணர்களுடன் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆளுநர் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியது.குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை ஆளுநர் ரவி அப்போது சந்தித்துப் பேசினார். அதன்பிறகு ஊட்டியில் துணைவேந்தர்களின் மாநாடும் நடந்தது. அதில் பெரும்பாலான அரசு பல்கழைக்கழங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை..

அரசிதழில் வெளியீடு

இதனிடையே அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துணை வேந்தர்களை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவை அமைப்பதற்கான சட்டத் திருத்தம் அண்மையில் தமிழக அரசிதழில் வெளியிட்டுள்ளது.முதல் பத்தியில், - (அ) "மாண்புமிகு ஆளுநர்-வேந்தருக்கு" என்ற சொற்றொடர் தவிர்க்கப்பட வேண்டும்; பத்தி 2 இல், "மாண்புமிகு அண்ணா பல்கலைக்கழக ஆளுநர்-வேந்தருக்கு," என்ற சொற்றொடர்க்குப் பதிலாக, "அரசாங்கத்திற்கு" என்ற சொற்றொடர் சேர்க்கப்பட வேண்டும் என்று அரசிதழில் குறிப்பிடப்பட்டது.


ஆளுநரின் தனியுரிமை

இது வெளியான மறுநாளே, அதாவது நேற்று தமிழக ஆளுநர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நேற்று 14 கேள்விகளை உச்ச நீதிமன்றத்துக்கு எழுப்பினார்.

1. ஒரு மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்கு வரும்போது அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின்கீழ், அவருக்கு இருக்கும் சட்டரீதியான வாய்ப்புகள் என்ன?

2. அப்படி ஒரு மசோதா அனுப்பப்பட்டு, தனக்குரிய அனைத்து வாய்ப்புகளையும் கவர்னர் பயன்படுத்தும்போது, அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்பட்டவரா?

3. அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ், ஆளுநரின் தனியுரிமை என்பது கோர்ட்டு ஆய்வுக்கு உட்பட்டதா?

4. அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்பாக கோர்ட்டு விசாரிக்க, அரசியல் சாசனத்தின் 361-வது பிரிவு தடையாக உள்ளதா?


காலக்கெடு நிர்யணம் சரியா

5. ஆளுநரின் செயல்பாடுகளுக்கு அரசியல் சாசனம் காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில், நீதிமன்ற உத்தரவு மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?

6. அரசியல் சாசனத்தின் 201-வது பிரிவின்கீழ், குடியரசுத் தலைவரின் தனியுரிமை என்பது கோர்ட்டு ஆய்வுக்கு உட்பட்டதா?

7. குடியரசுத் தலைவரின் செயல்பாடுகளுக்கு அரசியல் சாசனம் காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில், கோர்ட்டு உத்தரவு மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?

8. குடியரசுத் தலைவரின் அனுமதிக்காக ஆளுநர் மசோதாவை அனுப்பி வைக்கும்போது, அரசியல் சாசனத்தின் 143-வது பிரிவின்கீழ், சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை குடியரசுத் தலைவர் பெற வேண்டுமா?


ஜனாதிபதிக்கு உத்தரவு பிறக்க முடியுமா?

9. ஒரு சட்டம் அமலுக்கு வரும் முன்பு, ஆளுநரும், குடியரசுத் தலைவரும் அரசியல் சாசனத்தின் 200 மற்றும் 201-வது பிரிவுகளின்கீழ் எடுக்கும் முடிவுகள் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டதா?. மசோதா, சட்டம் ஆவதற்கு முன்பு, அதன் பொருள் குறித்து கோர்ட்டு விசாரிக்க அனுமதி உள்ளதா?

10. குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோரின் உத்தரவுகள் மற்றும் அதிகாரங்களை அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின்கீழ், வேறுவகையில் பிறப்பிக்க முடியுமா?

11. மாநில சட்டசபை நிறைவேற்றும் சட்டத்தை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமலே அமலுக்கு கொண்டுவர முடியுமா?

12. அரசியல் சாசனத்தின் 145(3)-வது பிரிவின்படி, அரசியல் சாசனம் குறித்த ஆழமான கேள்விகள் எழுப்பப்படும் வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்புவது கட்டாயம் இல்லையா?

13. அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின்கீழ், சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரங்கள், நடைமுறை சட்டத்துக்கு மட்டும் உட்பட்டதா? அல்லது அமலில் இருக்கும் அரசியல் சாசன நடைமுறைகளுக்கு முரண்பட்ட உத்தரவுகளை பிறப்பிக்க வழி செய்கிறதா?

14. மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான சச்சரவுகளை அரசியல் சாசனத்தின் 131-வது பிரிவின்கீழ் சிறப்பு வழக்கு தொடுக்காமல், வேறு வகைகளில் தீர்வு காண சுப்ரீம் கோர்ட்டின் அதிகார வரம்புக்கு அரசியல் சாசனம் தடையாக உள்ளதா?" இவ்வாறு 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பி இருந்தார்.

முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

இந்நிலையில் குடியரசுத் தலைவர் மூலம் கேள்வி எழுப்பி உள்ளதாக மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், "தமிழ்நாடு ஆளுநர் தொடர்பான வழக்கிலும், அதுபோன்ற பிற நிகழ்வுகளிலும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்து முடித்து வைத்துள்ள விவகாரத்தில், அந்த அரசியலமைப்பு நிலைப்பாட்டை நிலைகுலைக்கும் விதத்தில் குடியரசுத் தலைவர் மூலமாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பாஜக தூண்டுதல்

இதன்மூலமாக, தமிழ்நாடு ஆளுநர் பாஜகவின் தூண்டுதலின் பேரில்தான் மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சிறுமைப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார் என்பது அம்பலமாகி உள்ளது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மத்திய அரசின் முகவர்களான ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் வைத்து அவற்றை பலவீனப்படுத்தும் முயற்சியே அன்றி வேறில்லை. மேலும், இது சட்டத்தின் மாட்சிமைக்கும், அரசியலமைப்புச் சட்டத்தைப் பொருள்கொள்வதில் இறுதித் தீர்ப்பளிக்கும் உரிமைகொண்ட சுப்ரீம் கோர்ட்டுக்கும் நேரடியாகச் சவால் விடுகிறது.


கவர்னர்கள் முடிவெடுக்க காலநிர்ணயம்

கவர்னர்கள் முடிவெடுக்க காலநிர்ணயம் செய்யப்படுவதில் எதற்கு எதிர்ப்பு இருக்க வேண்டும்? சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலவரையற்ற தாமதத்தை அனுமதிப்பதின் வழியாக, கவர்னர்களின் முட்டுக்கட்டையை பாஜக சட்டப்பூர்வமாக்க முயல்கிறதா? பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநில சட்டமன்றங்களை மத்திய அரசு முடக்க எண்ணுகிறதா?

சுயாட்சிகே ஆபத்து

மிக முக்கியமான கட்டத்தில் நமது நாடு நிற்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் விளக்கம் கோரி எழுப்பப்பட்டுள்ள வினாக்கள் அரசியலமைப்பு சட்டம் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே அதிகாரங்களை பகிர்ந்தளித்துள்ளதன் அடிப்படையையே சீர்குலைக்கவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில சட்டமன்றங்களைத் திறனற்றதாக்கவும் நினைக்கும் மத்திய பாஜக அரசின் தீய எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. ஆகையால், மாநில சுயாட்சிக்கே இது உடனடி ஆபத்தை உருவாக்கி உள்ளது.

தமிழ்நாடு வெல்லும்

இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், பா.ஜனதா அல்லாத அனைத்து மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாப்பதற்கான சட்டப் போராட்டத்தில் இணையுமாறு வலியுறுத்துகிறேன். நம் ஒட்டுமொத்த ஆற்றலையும் ஒருங்கிணைத்து இப்போராட்டத்தில் ஈடுபடுவோம். தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்,


பிரதமர் அலுவலகம் அழைப்பு

இந்த பரபரப்பான சூழலில், நேற்று காலை 7 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லி புறப்பட்டுச்சென்றார். அவருடன் ஆளுநரின் செயலர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரியும் டெல்லி சென்றுள்ளார்கள். ஆளுநரின் வழக்கமான பயணம் என ராஜ்பவன் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த பயணம் பிரதமர் அலுவலக அழைப்பின் பேரில் அவர் சென்றிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

முக்கிய ஆலோசனை

தமிழக ஆளுநர் ரவி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் முக்கியமான மத்திய அமைச்சர்கள் சிலரை சந்திக்க உள்ளதாகவும், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆளுநர் ரவி பயணத்தை முடித்து வரும் வரும் 18-ம் தேதி மீண்டும் சென்னை திரும்ப உள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+