ராஜ்யசபா தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையை சிறிது நேரம் நடத்திய பி.டி உஷா..காரணம் இதுதான்
மாநிலங்களவை நியமன எம்.பியான பி.டி உஷா மாநிலங்களவை தலைவருக்கான இருக்கையில் அமர்ந்து சிறிது நேரம் அவையை நடத்தினார்.
டெல்லி: மாநிலங்களவை நியமன எம்.பியான பி.டி உஷா மாநிலங்களவை தலைவருக்கான இருக்கையில் அமர்ந்து சிறிது நேரம் அவையை நடத்தினார். இது தொடர்பான வீடியோ கிளிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் பி.டி. உஷா மிகவும் நெகிழ்ச்சியுடன் கேப்ஷனும் பதிவிட்டு இருக்கிறார்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள், நிபுணர்கள் உள்ளிட்டோர்கள் குடியரசுத் தலைவரால் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
அந்தவகையில், மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பிடி உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு சினிமா இயக்குநர் ராஜமவுலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் ஆகியோர் கடந்த வருடம், ஜூலை மாதம் நியமிக்கப்பட்டனர்.

தடகள வீராங்கனை பி.டி.உஷா
இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீராங்கனையான பி.டி.உஷா மாநிலங்களவை நடவடிக்கையிலும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். மாநிலங்களவையில் அவைத்தலைவர் இல்லாத சமயத்தில் அவையை நடத்துவதற்காக துணை சபாநாயகர் குழு ஏற்படுத்தப்படும். மாநிலங்களவையை பொறுத்தவரை நாட்டின் துணை ஜனாதிபதிதான் அவைத்தலைவராக இருப்பார். அந்த வகையில் துணை ஜனாதிபதி சிறிது நேரம் ஓய்வுக்காக செல்லும் போதே.. வேறு காரணங்களில் அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால் துணை சபாயகர் குழுவில் இடம் பெற்றிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அவையை நடத்துவர்.

சபையை நடத்திய பிடி உஷா
இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீராங்கனையான பி.டி.உஷா மாநிலங்களவை நடவடிக்கையிலும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். வழக்கமாக இந்தக் குழுவில் மூத்த உறுப்பினர்கள் இடம்பெறுவதுண்டு. கடந்த டிசம்பர் மாதம் ஏற்படுத்தப்பட்ட இந்தக் குழுவில் பி.டி உஷாவும் இடம் பெற்றார். நியமன எம்.பி ஒருவருக்கு அவையை வழிநடத்தக்கூடிய பொறுப்பு கொண்ட துணை சபாநாயகர் குழுவில் இடம் கொடுக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில், இன்று மாநிலங்களவை உறுப்பினர் பி.டி உஷாவிற்கு இன்று மாநிலங்களவையை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் அவை நடவடிக்கைகளில் சிறிது நேரம் பங்கேற்காமல் இருந்தார். அப்போது, பி.டி.உஷா அவைத்தலைவருக்கான இருக்கையில் அமர்ந்து சபையை நடத்தினார்.

என் மீது வைத்துள்ள நம்பிக்கை
இது தொடர்பான வீடியோ கிளிப்பையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் பி.டி உஷா அதில், கூறியிருப்பதாவது:- பெரிய அதிகாரங்களுக்கு அதிக பொறுப்பும் உண்டு என்பது பிரான்கிளின் டி ரூஸ்வெல்ட் கூற்றாகும். மாநிலங்களவை கூட்டத்தொடரில் இதை நான் உணர்ந்தேன். மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையின் மூலம் இந்த பயணத்தை மேற்கொண்டு இருக்கும் நான் புதிய மைல்ஸ்டோனை(சாதனை) உருவாக்குவேன்" என்று பதிவிட்டுள்ளார்.

மீண்டும் ஒருமுறை வரலாறு படையுங்கள்
மாநிலங்களவை நியமன எம்.பி பி.டி உஷாவின் இந்த ட்விட் பதிவிற்கு கீழே, அவரது ரசிகர்களும் பின் தொடர்பவர்களும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கூறி பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம். உங்கள் பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். மீண்டும் ஒருமுறை புதிய வரலாறு படையுங்கள். இந்தியாவின் மகள்களுக்கு நீங்கள் மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications