அனல் பறக்கும் குஜராத் தேர்தல் களம்: 43 பேருடன் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்!
டெல்லி: குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 43 பேருடனான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
குஜராத்தில் ஆட்சி அமைக்க 92 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தில் பாஜக ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. குஜராத்தின் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்தாலும் ஆட்சி அமைக்கக் கூடிய வலிமையுடன் அக்கட்சி இல்லை.

மும்முனைப் போட்டி
தற்போதைய தேர்தலில் பாஜக, காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கட்சியும் இணைந்துள்ளது. இதனால் குஜராத் மாநில தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. குஜராத் தேர்தலில் பாஜக எதிர்ப்பு வாக்குகளை இயல்பாகவே ஆம் ஆத்மி பிரிக்கும் என்பதால் பாஜக வெல்லும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இதனையே பல்வேறு தேர்தல் கருத்து கணிப்புகளும் தெரிவித்து வருகின்றன.

முதல்வர் வேட்பாளர்
ஆம் ஆத்மி கட்சியானது தனது முதல்வர் வேட்பாளராக இஸ்தான் காத்வியை அறிவித்துள்ளது. மக்களின் கருத்துகளை கேட்டு அதனடிப்படையில் காத்வி, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். குஜராத்தில் பாஜகவுக்கு ஆம் ஆத்மி கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்து வருகிறது.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்
இப்பின்னணியில் காங்கிரஸ் கட்சி தமது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 43 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. அமீபென் யாக்னி, ஹட்லோதியா தொகுதியில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் முதல்வர் பூபேந்திர படேல் மீண்டும் பாஜக வேட்பாளராக களமிறங்க இருக்கிறார்.

யார் யார்?
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அர்ஜூன் மோத்வாடியா, போர்பந்தர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதியில் 1,800 வாக்குகள் வித்தியாசத்தில் மோத்வாடியா தோல்வியைத் தழுவினார். பாவ்நகர் மாவட்டம் மஹூவாவில் கனுபாய் கல்சாரியா, காந்திநகர் தெற்கு தொகுதியில் ஹிமன்சு படேல் ஆகியோர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications