திகிலூட்டும் “குஜராத் மாடல்”.. மரண கூடங்களான காவல் நிலையங்கள்! கஸ்டடி மரணத்தில் இந்தியாவிலேயே டாப்
இந்தியாவில் காவல்துறை விசாரணையின்போது கைதான நபர்கள் கொல்லப்படும் சம்பவங்களில் குஜராத் முதலிடம் பிடித்து இருக்கிறது.
டெல்லி: இந்தியாவில் காவல்துறை விசாரணையின்போது கைதான நபர்கள் கொல்லப்படும் சம்பவம் தொடர் கதையாகி வரும் நிலையில், இவ்வாறு அதிகளவிலான சம்பவங்கள் நடைபெற்ற மாநிலங்களில் குஜராத் முதலிடம் பிடித்து இருக்கிறது. அந்த மாநிலத்தில் எத்தனை பேர் 5 ஆண்டுகளில் இவ்வாறு இறந்துள்ளனர்? இதற்கு அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் மாநிலங்கள் எவை? விரிவாக பார்ப்போம்.
இந்தியாவின் அனைத்து மாநில காவல் நிலையங்களில் நிகழ்த்தப்படும் கஸ்டடி மரணங்கள் குறித்து நாடாளுமன்ற ராஜ்ய சபாவில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள காவல் நிலையங்களில் நிகழ்ந்த கஸ்டடி மரணங்களின் விபரம் குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் ராஜ்ய சபாவில் புள்ளி விபரங்களுடன் விளக்கம் கொடுத்து உள்ளார்.

669 பேர் உயிரிழப்பு
அதன்படி, 2017 - 2018 முதல் 2021 - 2022 நிதியாண்டு வரை நாடு முழுவதும் 669 பேர் காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்து இருக்கின்றனர். கடந்த 2017 - 2018 ஆண்டில் 146 பேர் காவல்துறை கஸ்டடியில் உயிரிழந்து உள்ளனர். 136 பேர் 2018 - 2019 நிதியாண்டிலும், 2019 -2020 நிதியாண்டில் 112 பேரும் கஸ்டடியில் மரணமடைந்து உள்ளார்கள்.

குஜராத் முதலிடம்
2020 - 2021 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 100 ஆக குறைந்த நிலையில், கடந்த 2021 - 2022 நிதியாண்டு வரை 5 ஆண்டுகளில் அதிகபட்சமாக 175 பேர் காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்து இருக்கின்றனர். இதில் மாநில அளவில் எடுத்துக்கொண்டால் குஜராத் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்து உள்ளார்.

80 பேர் மரணம்
இந்தியாவிலேயே அதிகபட்சமாக குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 80 பேர் காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தபோது கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் 2 வது இடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் 76 பேர் காவல்துறை கஸ்டடியில் உயிரிழந்து உள்ளார்கள். 3 வது இடத்தில் இருக்கும் உத்தரப்பிரதேசத்தில் 41 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாடு 4 வது இடம்
இந்த பட்டியலில் 4 வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. அங்கு 40 பேர் காவல்நிலையத்தில் விசாரணையின்போது உயிரிழந்து இருக்கின்றனர். 5 வது இடத்தில் உள்ள பீகாரில் 38 பேர் காவல் நிலைய விசாரணையில் உயிரிழந்து உள்ளனர். 9 யூனியன் பிரதேசங்களிலேயே தலைநகர் டெல்லியில் அதிகபட்சமாக 29 பேர் போலீஸ் காவலில் உயிரிழந்து இருக்கிறார்கள்.

ஜம்மு காஷ்மீர்
அடுத்தபடியாக ஜம்மு காஷ்மீரில் 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். மாநில அளவில் முதலிடத்தில் இருக்கும் குஜராத்தில் 2017 - 2018 ஆண்டில் 14 பேர் காவல்துறை கஸ்டடியில் உயிரிழந்து உள்ளனர். 13 பேர் 2018 - 2019 நிதியாண்டிலும், 2019 -2020 நிதியாண்டில் 12 பேரும் கஸ்டடியில் மரணமடைந்து உள்ளார்கள். 2020 - 2021 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 17 ஆக இருந்தது.

தமிழ்நாட்டில் குறைந்த எண்ணிக்கை
குஜராத்தில் கடந்த 2021 - 2022 நிதியாண்டு வரை 5 ஆண்டுகளில் அதிகபட்சமாக 24 பேர் காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்து உள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த 2017 - 2018 மற்றும் 2018 - 2019 ஆண்டுகளில் தலா 11 பேரும் 2019 -2020 நிதியாண்டில் 12 பேரும் உயிரிழந்து இருக்கின்றனர். ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 2 மற்றும் 4 ஆக குறைந்து உள்ளது.













Click it and Unblock the Notifications