தினமும் ரூ.5.9 கோடி நன்கொடை.. தொடர்ந்து முதலிடத்தில் ஷிவ் நாடார்.. அம்பானி, அதானி செய்தது எவ்வளவு?
டெல்லி: இந்தியாவில் ஏராளமான தொழிலதிபர்கள் உள்ளனர். ஆனால் அதில் சிலர் மட்டுமே உதவி மற்றும் சேவை மனநிலையில் இருப்பார்கள். சமீபத்தில் மறைந்த டாடா குழுத்தின் ரத்தன் டாடா பல தொழில் முனைவோர்களுக்கு கை கொடுத்து உதவியுள்ளார். இந்நிலையில் நாட்டிலேயே அதிகளவு நன்கொடை செய்யும் தொழிலதிபர் பட்டியலில் ஷிவ் நாடார் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார்.
ஹெச்சிஎல் (HCL) டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனராக இருப்பவர் ஷிவ் நாடார். 79 வயதாகும் அவர் இந்தியாவின் முன்னணி தொழிலதிபராக இருக்கிறார். தொழிலதிபர் பட்டியலில் மட்டுமல்லாமல் நன்கொடை செய்பவர்களின் பட்டியலிலும் ஷிவ் நாடார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

Edelgive Hurun India என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும், ஏழைகளுக்கு உதவி செய்வோர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக இந்தப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து ஷிவ் நாடார் புதிய சாதனை படைத்திருக்கிறார்.
2024 நிதியாண்டில் மட்டும் ஷிவ் நாடார் ரூ.2,153 கோடிக்கு நிதியை நன்கொடையாக வழங்கியிருக்கிறார். இந்தப் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி, பஜாஜ் குழுமம், பிர்லா குழுமம் குமார் மங்கலம் மற்றும் அதானி குழுமத்தின் கௌதம் அதானி ஆகியோரும் டாப் 10 பட்டியலில் இருக்கிறார்கள்.
டாப் 10 பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே கடந்த நிதியாண்டில் ரூ.4,625 கோடி நிதி நன்கொடை செய்திருக்கிறார்கள். ஷிவ் நாடார் கடந்த 1994 ஆம் ஆண்டு முதல், ஷிவ் நாடார் பவுண்டேசன் தொடங்கி கல்வி, கலை மற்றும் கலாசாரம் ஆகியவற்றுக்கு நன்கொடை வழங்கி வருகிறார். தற்போதைய புள்ளி விவரப்படி ஷிவ் நாடார் தினசரி ரூ.5.9 கோடி நிதியை நன்கொடையாக வழங்கி வருகிறார்.
கடந்த 2023 ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, ஷிவ் நாடாரின் பங்களிப்பு 5 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 67 வயதாகும் முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அவர் கடந்த நிதியாண்டில் ரூ.407 கோடி நிதியை நன்கொடையாக வழங்கியிருக்கிறார். பஜாஜ் குழுமம் ரூ.352 கோடி நிதி நன்கொடையுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
2023 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது பஜாஜ் குழுமத்தின் நன்கொடை பங்களிப்பு இந்தமுறை 33 சதவீதம் உயர்ந்திருக்கிறது. 57 வயதாகும் குமார் மங்கலம் பிர்லா ரூ.334 கோடி நிதி நன்கொடையுடன் நான்காவது இடத்தில் இருக்கிறார். ரூ.330 கோடி நன்கொடையுடன் 62 வயதாகும் கெளதம் அதானி ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நலெக்கனி (ரூ.307 கோடி) INDO MIM நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா சிவுகுலா (ரூ.228 கோடி), வேதாந்தா குழுமம் அனில் அகர்வால் (ரூ.181 கோடி) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
இந்த ஆய்வை மேற்கொண்ட Edelgive Hurun அமைப்பினர், இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் நன்கொடை செய்வோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 30 பேர் ரூ.50 கோடிக்கு மேல் நன்கொடை செய்கிறார்கள். 61 பேர் ரூ.20 கோடிக்கு மேல் நன்கொடை செய்கின்றனர். பெரும்பாலான தொழிலதிபர்கள் கல்விக்கு தான் அதிக நன்கொடை செய்துள்ளனர்.
கல்விக்கு மட்டும் சுமார் ரூ.3,680 கோடி நன்கொடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சுகாதாரத்துக்காக ரூ.626 கோடி நன்கொடை செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications