ஒண்ணுமே கண்ணுக்கு தெரியல.. கடுமையான பனி மூட்டம் காரணமாக சென்னை, டெல்லி, பெங்களூர் விமானங்கள் தாமதம்!
டெல்லி: டெல்லியில் அதிகாலை முதல் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக 92 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரிலும் 37 விமானங்கள் தாமதம் காரணமாக விமான நிலையத்தில் பயணிகள் தவித்து வருகின்றனர். சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்பட்டு வருகின்றன.
வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால், வெப்பநிலை மிகவும் குறைந்துள்ளது. டெல்லியில் விமான நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளில், 100 அடிக்கு அப்பால் உள்ள எதுவும் தெரியாத அளவுக்கு பனி கொட்டி வருகிறது. காற்றில் நிலவிய ஈரப்பதம் காரணமாக காற்றின் தரக்குறியீடும் 300 என்ற மோசமான நிலையை எட்டியது.

டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வரும் ஜனவரி 8 ஆம் தேதி வரை மூடுபனி நிலவும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இமாச்சல பிரதேசம், லடாக்கில் பனிப்பொழிவுடன், லேசான மழைப்பொழிவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அடர் பனி மூட்டம் போர்வை போல இருந்ததால் டெல்லி விமான நிலையத்தில் இன்று காலை 50 மீட்டரில் எதிரிலிருக்கும் காட்சிகள் எதுவும் தெளிவாக தெரியவில்லை என்பதால் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
டெல்லியில் இன்று அதிகாலை முதல் பனி மூட்டம் காரணமாக விமான நிலைய ஓடுபாதை தெரியாததால், இண்டிகோ, ஏர் இந்தியா உட்பட 92 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் தரையிறங்க வேண்டிய 6 விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
இதே போல் பெங்களூரில் மூடுபனியால் 37 விமானங்கள் வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூர், டெல்லிக்கு புறப்பட வேண்டிய 15க்கும் மேற்பட்ட விமானங்களும் தாமதமாக புறப்பட்டு வருகின்றன. 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications