தமிழகத்தில் கனமழை.. முதல்வர் ஸ்டாலினுடன், பிரதமர் மோடி பேச்சு.. மத்திய அரசு உதவும் என உறுதி!
டெல்லி: சென்னையில் நேற்று மாலை தொடங்கிய பேய் மழை இன்று அதிகாலை வரை பெய்தது. கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது. நேற்று இரவு மட்டும் மொத்தம் 207 மிமீ மழை பெய்துள்ளது.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் இருக்கும் மக்களை பத்திரமாக வெளியயேற்றும்படி அவர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் தமிழகத்தின் பல இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளிலும் மழை கொட்டி வருகிறது. தமிழகத்தில் மழைக்கு பலர் இறந்துள்ளனர். 250-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று அவர் உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

சில பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நிலவரம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேசினேன். மாநிலத்தில் நிலவும் நிலவரம், பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தமிழத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். மழையால் அனைவரின் நலம் மற்றும் பாதுகாப்புக்காக நான் பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications