சடங்குகள் இல்லாத இந்து திருமணம், இந்து திருமண சான்றிதழ் ரத்து.. உச்ச நீதிமன்ற உத்தரவின் முழு விவரம்
டெல்லி: முறையான இந்து திருமண சடங்குகள் இல்லாமல் திருமணம் செய்து கொண்டால், இந்து திருமண சட்டப்படி, அத்தகைய திருமணங்களை அங்கீகரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருமணம் என்பது வெறும் ஆடல், பாடலுக்கான நிகழ்ச்சி அல்ல என்றும் வரதட்சணை மற்றும் பரிசுப்பொருள் வாங்குவதற்கான வர்த்தக பரிமாற்ற நிகழ்ச்சி அல்ல என்றும் கூறியுள்ளது.
விமானிகளாக பணியாற்றும் ஒரு ஆணும், பெண்ணும் முறையான இந்து திருமண சடங்குகள் இல்லாமல் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். பின்னர், அவர்கள் விவாகரத்து கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறுகையில், "இன்றைக்கு இளைஞர்களும், இளம்பெண்களும் திருமணம் என்கின்ற பந்தத்தில் நுழைவதற்கு முன்பு, இந்திய சமூகத்தில் திருமணம் எவ்வளவு புனிதமானது என்பதை பற்றி ஆழ்ந்து சிந்தித்தல் வேண்டும். ஆடல், பாடலுக்கான நிகழ்ச்சி என்பது கல்யாணம் அல்ல. கல்யாணம் என்பது மது அருந்துவதற்கும், சாப்பிடுவதற்குமான நிகழ்ச்சியும் அல்ல. அதேநேரம் கல்யாணம் என்பது அழுத்தம் கொடுத்து, வரதட்சணை மற்றும் பரிசுப்பொருள் வாங்குவதற்கான வர்த்தக பரிமாற்ற நிகழ்ச்சி அல்ல.
திருமணம் என்பது ஒரு ஆணும், பெண்ணும் கணவன்-மனைவி என்ற அந்தஸ்தை பெற்று, எதிர்காலத்தில் குடும்ப கட்டமைப்பை உருவாக்குவதற்கான உறவுக்கு அடித்தளமிடும் புனிதமான நிகழ்ச்சியாகும். ஆண் பெண் என்ற 2 தனிநபர்கள் வாழ்நாள் முழுவதும் கண்ணியமான, சமமான, ஆரோக்கியமான உறவில் நுழையும் புனிதமான நிகழ்ச்சியாகும்.
ஆனால், இந்த மனுதாரர்களை போல், இளைய தலைமுறையினர் இந்து திருமண சட்டப்படி எவ்வித முறையான சடங்குகளும் இல்லாமல் கணவன்-மனைவி அந்தஸ்தை பெறுவதை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கிறது. திருமணத்தில், மணமகனும், மணமகளும் அக்னி முன்பு 7 அடிகள் சேர்ந்து நடந்து வர வேண்டும். ரிக் வேதத்தில் இதை 'சப்தபடி' என்று கூறுவார்கள். "நாம் நண்பர்களாகி விட்டோம். இந்த நட்பில் இருந்து பிரிய மாட்டேன்'' என்று மணமகளிடம் மணமகன் கூறுவான். இந்த சடங்கு இல்லாமல் நடத்தப்படும் இந்து திருமணத்தை இந்து திருமணமாக கருத முடியாது.
இ்ந்து திருமண சட்டப்படி, திருமணம் என்பது புனிதமானது. புதிய குடும்பத்துக்கான அடித்தளம் ஆகும் எனவே, இத்தகைய சடங்குகள் இல்லாமல் நடத்தப்படும் திருமணத்தை இந்து திருமண சட்டத்தின் 7-வது பிரிவின்படி, இந்து திருமணமாக கருத முடியாது. திருமண சடங்குகள் இல்லாமல் வெறும் திருமண பதிவு சான்றிதழ் பெற்றாலும், அது திருமண அந்தஸ்தை உறுதி செய்யாது.
திருமண சர்ச்சைகளின்போது, அச்சான்றிதழ் ஒரு ஆதாரமாக கருதப்படலாம். ஆனால், சடங்கு இல்லாமல் நடத்தப்பட்ட திருமணத்துக்கு அச்சான்றிதழ் சட்ட அந்தஸ்து அளிக்காது. இந்து திருமண சட்டப்படி, அதை திருமணமாக கருத இயலாது.
1954-ம் ஆண்டின் சிறப்பு திருமண சட்டப்படி, எந்த மத, சாதி, இனத்தை சேர்ந்த ஆணும், பெண்ணும் கணவன்-மனைவி அந்தஸ்தை பெறலாம். ஆனால், 1955-ம் ஆண்டின் இந்து திருமண சட்டப்படி, அவர்கள் 5-வது பிரிவில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்வதுடன், 7-வது பிரிவில் கூறப்பட்டுள்ள சடங்குகளையும் கண்டிப்பாக செய்திருக்க வேண்டும். ஆனால்,வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர்கள், இந்து திருமண சட்டப்படி திருமணம் செய்யவில்லை. முறையான சடங்குகள் இன்றி அவர்கள் பெற்ற திருமண பதிவு சான்றிதழ் செல்லாது. அவர்களது விவாகரத்து வழக்கும் ரத்து செய்யப்படுகிறது" இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications