அறை எண்: 122.. அதிர்ந்த டெல்லி! உபி அரசு இல்லத்திலேயே பாலியல் கொடுமை! இந்துத்துவா தலைவர் மீது வழக்கு
டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள உத்தரப்பிரதேச மாநில அரசின் விருந்தினர் இல்லத்தில் இந்துத்துவா அமைப்பின் தலைவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் காவல்நிலையத்தில் பரபரப்பு புகாரை அளித்து இருக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநில அரசின் விருந்தினர் இல்லம் மத்திய டெல்லியில் அமைந்து இருக்கிறது. இங்குதான் கடந்த மே 26 ஆம் தேதி பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்து இருக்கிறார். அந்த பெண்ணால் குற்றம்சாட்டப்பட்ட நபர் ராஜ்யவர்தன் சிங் பார்மர்.

இந்துத்துவா அமைப்பான மஹாரானா பிரதாப் சேனாவின் தேசிய தலைவராக பதவி வகித்து வருபவர்தான் ராஜ்யவர்தன் சிங் பார்மர். இவர் கடந்த மே 26 ஆம் தேதி பகல் 12.15 மணியளவில் டெல்லியில் உள்ள உத்தரப்பிரதேச அரசுக்கு சொந்தமான விருந்தினர் இல்லத்துக்கு ஒரு பெண்ணுடன் சென்று இருக்கிறார்.
அந்த இல்லத்தில் அவருக்கென ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில் மதியம் 1.50 மணியளவில் அவர் உபி அரசு விருந்தினர் இல்லத்தில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான் ராஜ்யவர்தன் சிங் பார்மர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் டெல்லி சானக்யாபுரி காவல் நிலையத்தில் புகாரளித்து இருக்கிறார்.
அவரளித்து இருக்கும் புகாரில், டெல்லி உத்தரப்பிரதேச அரசு விருந்தினர் இல்லத்தில் உள்ள அறை ஒன்றில் 2 அமைச்சர்கள் இருப்பதாக ராஜ்யவர்தன் சிங் பார்மர் தன்னிடம் கூறியதாகவும், அவர்களை சந்தித்தால் வேலை கிடைக்க உதவி செய்வார்கள் என்று உறுதியளித்ததாகவும் தெரிவித்து உள்ளார்.

அவர் சொன்னதை நம்பி உத்தரப்பிரதேச அரசு இல்லத்தில் அவருடன் சென்று ஒரு அறைக்குள் தான் நுழைந்ததாகவும், ஆனால் உள்ளே அமைச்சர்கள் யாருமே இல்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்து இருக்கிறார். அப்போது அறைக்குள் நுழைந்த மஹாரானா பிரதாப் சேனாவின் தேசிய தலைவர் ராஜ்யவர்தன் சிங் பார்மர் கதவை தாழிட்டு தன்னை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் கூறியுள்ளார்.
பெண்ணின் புகாரை உபி அரசு விருந்தினர் இல்லத்தில் பொறுத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களும் உறுதிபடுத்தி இருக்கின்றன. ராஜ்யவர்தன் சிங் பார்மர் ஒரு பெண்ணுடன் அங்கு செல்வது பதிவாகி உள்ளது. அவருக்கு ஒதுக்கப்பட்ட அறை எண் 122 சீல் வைக்கப்பட்டு தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உத்தரப்பிரதேச அரசு துறைவாரியான விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. உத்தரப்பிரதேச அரசு விருந்தினர் இல்லத்தில் பணியில் இருந்த அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்கள். இதுதொடர்பாக டெல்லி போலீசும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பரிந்துரைக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் அறை ராஜ்யவர்தன் சிங் பார்மருக்கு எப்படி ஒதுக்கப்பட்டது? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ராஜ்யவர்தன் சிங் பார்மர் அளித்துள்ள விளக்கத்தில், அரசு அதிகாரி ஒருவருக்கே தான் அறையை முன்பதிவு செய்துகொடுத்ததாகவும், அவரை சந்திப்பதற்காகவே அங்கு சென்றதாகவும் கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications