50 ஆண்டு எல்லை பிரச்சனைக்கு தீர்வு! அசாம்-மேகாலயா விவகாரத்தில் அசத்திய அமித்ஷா!
டெல்லி: வடகிழக்கு மாநிலங்களான அசாம்-மேகாலயா இடையே நிலவி வந்த 50 ஆண்டுகால எல்லை பிரச்சனைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் இன்று தீர்வு காணப்பட்டது.
வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக அசாம், மேகாலயா மாநிலங்களுக்கு இடையே நிலவும் எல்லை பிரச்சனையை சுமூகமாக தீர்க்க மத்திய அரசு முடிவு செய்தது.
இதுதொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இரு மாநில எல்லை விவகாரம் தொடர்பாகவும், அதற்கான தீர்வு குறித்தும் ஜனவரி 31ல் வரைவு தீர்மானத்தை இருமாநில முதல்வர்களும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அனுப்பி வைத்தனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்த வரைவு தீர்மானங்கள் மீது மத்திய உள்துறை அமைச்சர் ஆய்வு செய்தது. இருமாநிலங்களுக்கும் பிரச்சனை ஏதுவுமின்றி எல்லை பிரச்சனையை தீர்க்கும் வகையில் தீவிரமாக பரிசீலனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 2 மாதங்களுக்கு பின்பு அசாம்-மேகாலயா மாநிலங்களுக்கு இடையேயான எல்லை பிரச்சனை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று மேற்கொள்ளப்பட்டது. டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா ஆகியோர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

பிரச்சனை பகுதிகள் பிரிப்பு
இருமாநிலங்களும் 884 கிலோமீட்டர் தெலைவுள்ள எல்லையை பகிர்ந்து கொள்ளும் நிலையில் அதில் 12 பகுதிகளில் பிரச்சனை நிலவியது. தற்போது இதில் 6 இடங்களில் சுமூக தீர்வு எட்டுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம் 36 கிராமங்கள் அடங்கிய 36.79 சதுர கிலோமீட்டர் நிலப்பகுதியில் அசாமிற்கு 18.51 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பும், மேகாலயாவுக்கு 18.28 சதுர கிலோமீட்டர் நிலப்பகுதியும் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

50 ஆண்டு பிரச்சனை
அசாமில் இருந்து 1972ம் ஆண்டு புதிய மாநிலமாக மேகாலயா பிரிக்கப்பட்டது. இதையடுத்து இருமாநிலங்களுக்கும் இடையே எல்லை பிரச்சனை உருவானது. தற்போது 50 ஆண்டுகளுக்கு பிறகு எல்லை பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதுபற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், ‛‛வடகிழக்கு பகுதியில் இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும். ஏனென்றால் அசாம், மேகாலயா மாநிலங்களுக்கு இடையேயான எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த முதற்கட்ட நடவடிக்கையால் இருமாநிலங்களுக்கு இடையே நிலவிய எல்லை பிரச்சனையில் 70 சதவீதம் தீர்க்கப்பட்டுள்ளது'' என தெரிவித்தார்.

மேகாலயா முதல்வர் சொல்வதென்ன
இதுபற்றி மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா கூறுகையில், ‛முதற்கட்டமாக அசாம்-மேகாலயா இடையேயான எல்லை பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மாவால் தான் சாத்தியமானது. மேலும் வங்கதேசம் இடையேயான எல்லை பிரச்சனையையே தீர்க்க முடியும் என்றால் மாநிலங்களுக்கு இடையேயான எல்லை பிரச்சனைக்கு எளிதில் தீர்வு காணலாம் என பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தனர். இதன் பயனாக முதற்கட்டமாக எல்லை பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது ' என்றார்.












Click it and Unblock the Notifications