லோக்சபா ‛ஸ்பிரே’ அட்டாக்.. விசாரணை குழு அமைத்த மத்திய உள்துறை அமைச்சகம்! தலைவர் யார் தெரியுமா?
டெல்லி: நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நேற்று 2 பேர் நுழைந்து மஞ்சள் நிற புகையை வெளியயேற்றும் ஸ்பிரேவை அடித்தனர். இது எம்பிக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. இந்நிலையில் தான் சம்பவம் குறித்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழுவின் தலைவர், குழு மேற்கொள்ள உள்ள விசாரணை குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லியில் தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று லோக்சபா தொடங்கி நடந்து வந்தது. மதியம் சுமார் 1 மணியளவில் திடீரென்று 2 பேர் பார்வையாளர் மாடத்தில் இருந்து லோக்சபா அரங்குக்குள் குதித்தனர்.

மஞ்சள்நிற ஸ்பிரே அடித்தனர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து எம்பிக்கள் துணிச்சலாக அவர்களை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். மேலும் இருவரும் பாதுகாவலர்கள் மூலம் டெல்லி போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
அதேபோல் நாடாளுமன்றத்துக்கு வெளியேவும் பெண் உள்பட 2 பேர் ஸ்பிரே அடித்து பரபரப்பை கிளப்பினர். அவர்களும் கைது செய்யப்பட்டனர். லோக்சபாவுக்குள் நுழைந்து ஸ்பிரே அடித்தவர்களின் பெயர்கள் சாகர் சர்மா மற்றும் டி மனோ ரஞ்சன் (வயது 35) என்பதும், நாடாளுமன்ற வளாகத்தில் ஸ்பிரே அடித்தது ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்த நீலம் (42) மற்றும் அமோல் ஷிண்டே (25) என்பதும் தெரியவந்தது. இவர்களுக்கு உடந்தையாக இருந்த இன்னொருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றொருவர் தலைமறைவாக உள்ளார். அவரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ், திமுக உள்பட பல்வேறு கட்சிகளின் எம்பிக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் இருக்கும் எம்பிக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதில் மத்திய அரசு தவறிவிட்டது. இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பது அதிகரிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக நாடாளுமன்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் பார்வையிட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க மத்திய உள்துறை அமைச்சகம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதோடு விசாரணைக்காக தனிக்குழுவையும் அமைத்துள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் டைரக்டர் ஜெனரல் அனிஷ் தயால் சிங் தலைமையில் குழு வைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பிற பாதுகாப்பு அமைப்புகளை சேர்ந்தவர்களும், நிபுணர்களும் உறுப்பினர்களாக இடம்பெற உள்ளனர்.
இந்த குழு தற்போது நடந்த சம்பவம் பற்றி விசாரித்து பாதுாப்பு குறைபாடு எப்படி ஏற்பட்டது என்பது பற்றி விசாரிக்க உள்ளது. மேலும் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பை இன்னும் மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை அறிக்கையாக வழங்க உள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்பது எடுக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications