2012இல் சீன சுரங்க தொழிலாளர்களுக்கு கொரோனா?வூஹான் ஆய்வகத்தில் நடந்தது என்ன?புனே தம்பதி முக்கிய தகவல்
டெல்லி: கொரோனா வைரசஸ் வூஹான் நகரிலுள்ள வைரலாஜி மையத்திலிருந்து பரவியிருக்க வாய்ப்புகள் அதிகம் என்று கூறிய ஆய்வுகளை மேற்கொள்ளும் புனே தம்பதி, இதற்கான புதிய ஆதாரங்களையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாகவே கொரோனா மட்டுமே உலகின் அனைத்து நாடுகளில் முன்னுரிமையாக உள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தங்களால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தற்போது தடுப்பூசி பணிகளையே அனைத்து நாடுகளும் விரைவாக மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும்கூட, இந்த கொரோனாவின் தோற்றம் குறித்து நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை.

கொரோனா தோற்றம்
கொரோனா வைரஸ் தோற்றம் குறித்துத் தெரிந்துகொள்ள பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இவை சர்வதேச அளவில் பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. வூஹான் நகரில் அமைந்துள்ள வைரலாஜி மையத்திலிருந்து கொரோனா பரவியிருக்கலாம் என்ற கருத்தைத் தொடக்கத்திலேயே ஆராய்ச்சியாளர்கள் மறுத்தனர். இந்தாண்டு சீனாவில் ஆய்வுகளை மேற்கொண்ட உலக சுகாதார அமைப்பின் ஆய்வாளர்களும்கூட கொரோனா ஆய்வு மையத்திலிருந்து பரவியிருக்க வாய்ப்பு குறைவு என்றே தெரிவித்தனர்.

அமெரிக்கா தகவல்
வூஹான் வைரலாஜி மையம் கருத்து சற்றே அடங்கியிருந்த சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியான அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் அறிக்கை மீண்டும் புது புயலைக் கிளப்பியது. அதில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதமே கொரோனா ஒத்த அறிகுறிகளுடன் வூஹான் ஆய்வு மையத்திலிருந்து பல ஆராய்ச்சியாளர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து கொரோனோ தோற்றம் குறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய அமெரிக்க அதிபர் பைடன் உத்தரவிட்டார். பிரிட்டன் உளவுத் துறையும் இதையே தான் கூறியது.

புனே தம்பதி
இந்நிலையில், புனேவை சேர்ந்த மோனாலி ரஹல்கர் மற்றும் டாக்டர் ராகுல் பாஹுலிகர் என்ற இரு ஆராய்ச்சியாளர்கள் வூஹான் மையத்தில் இருந்து கொரோனா பரவியிருக்க வாய்ப்புகள் உள்ளதாக புதிய ஆதாரங்களை மேற்கோள்காட்டிக் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "கொரோனா பரவல் காரணமாக நாம் பெருந்துன்பத்தை சந்தித்து வருகிறோம். இதனால் வைரசின் தோற்றம் குறித்துத் தெரிந்து கொள்ள முடிவு செய்தோம். இதையடுத்து சார்ஸ் RATG13 வைரஸை ஒத்து இருக்கும் வைரசின் தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கினோம்.

2012ஆம் ஆண்டு
அப்போது தான் தென் சீனாவின் மோஜியாங்கில் கைவிடப்பட்ட செம்பு சுரங்கம் தொடர்பான ஆவணங்களைக் கண்டுபிடித்தோம். கடந்த 2012 ஆம் ஆண்டு, அந்த சுரங்கத்தைச் சுத்தம் செய்ய ஆறு தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர், அந்த சுரங்கம் வௌவால் கழிவுகளால் நிரம்பியிருந்தது. சுரங்க தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டபோது, அந்த கழிவுகள் காற்றில் கலந்துவிட்டது. அதைச் சுவாசித்த தொழிலாளர்கள் ஆறு பேருக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

கொரோநா ஒத்த அறிகுறிகள்
அவர்கள் 6 பேருக்கும் தற்போது பரவும் கொரோனாவுக்கு ஒத்த அறிகுறிகளே இருந்தன. காய்ச்சல், இருமல், ரத்த உறைதல் போன்ற அறிகுறிகள் இருந்தன, மேலும், அவர்களுக்கு நுரையீரலில் நிமோனியாவும் ஏற்பட்டது. அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர். அந்த நோயாளிகளுக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன்களை நாங்கள் ஆராய்ந்தோம். அதுவும் தற்போதுள்ள கொரோனா நோயாளிகளின் சிடி ஸ்கேன் போலவே உள்ளன.

பூஞ்சை பாதிப்பு
நாங்கள் இது குறித்துக் கடந்த ஆண்டு மே மாதம் ஆய்வு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டோம். அதன் பின்னர் TheSeeker என்ற ட்விட்டர் ஐடியில் இருந்து ஒருவர் எங்களைத் தொடர்பு கொண்டார். அவர் சுரங்க நோயாளிகளின் அறிகுறிகளை விளக்கி சீன மொழியிலிருந்த சில ஆவணங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையும் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை போலவே இருந்தன. அவர்களில் சிலருக்குப் பூஞ்சை பாதிப்பும் இருந்தன.

வூஹான் ஆய்வகம்
இந்த வைரசை வைத்து வூஹான் ஆய்வு மையத்தில் ஆராய்ச்சிகள் நடைபெற்றிருக்கலாம். அப்போது, இந்த வைரசை மாற்ற ஆய்வாளர்கள் முயன்றிருக்கலாம். அப்போது, கொரோனா மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம். இருப்பினும், இதை உறுதியாகக் கூற முடியாது. உண்மையைக் கண்டறிய நாம் கண்டிப்பாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்..

ஆய்வகத்திலிருந்து வைரஸ்
இந்த கொரோனா வௌவால்களில் இருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்றும் அதன் பிறகு சீனாவின் விலங்கு சந்தை மூலம் மற்றவர்களுக்கு இது பரவியிருக்கலாம் என்று கூறுகிறார்கள். ஆனால், இதற்கு உறுதி செய்ய ஆதாரங்கள் இல்லை. ஆனால், இந்த வைரசை ஆய்வு செய்யும் போது அது மனிதர்களைப் பாதிக்கத் தயாராகவே இருந்தது, எனவே, இது ஆய்வகத்திலிருந்து பரவியிருக்க வாய்ப்புகள் மிக அதிகம்" என்று அவர்கள் தெரிவித்தனர்,












Click it and Unblock the Notifications