லோக்சபா செல்லும் 74 பெண் எம்பிக்கள்; மே.வங்கத்தில்தான் அதிகம்! தமிழ்நாட்டில் இருந்து எத்தனை பேர்?
டெல்லி: 18-வது லோக்சபா தேர்தலில் மொத்தம் 74 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்.பி.க்களாகி உள்ளனர். அதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து 11 பெண் எம்பிக்கள் லோக்சபா செல்கின்றனர். தமிழ்நாட்டில் இருந்து 5 பெண் எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் முதலாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது முதலே பெண்களின் பிரதிநிதித்துவம் பேசுபொருளாக இருந்து வருகிறது. நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் சட்டசபை, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவும் கூட அமல்படுத்தப்பட இன்னமும் காலம் ஆகும்.

ஒவ்வொரு லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகும் போதும் பெண்களின் பிரநிதித்துவம் குறித்த விவாதங்களும் நடத்தப்படுகின்றன. லோக்சபா தேர்தல்களில் 2014-ம் ஆண்டுதான் முதல் முறையாக லோக்சபாவில் பெண் எம்பிக்களின் எண்ணிக்கை 60ஐ தாண்டியது. அத்தேர்தலில் மொத்தம் 61 பெண் எம்பிக்கள் லோக்சபாவுக்கு சென்றனர்.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் மொத்தம் 79 பெண் எம்பிக்கள் தேர்வாகினர். ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் இந்த எண்ணிக்கை சற்று குறைந்துதான் உள்ளது. மொத்தம் 74 பெண் எம்பிக்கள் இந்தத் தேர்தலில் தேர்வாகி உள்ளனர்.
மாநிலங்களின் அடிப்படையில் மேற்கு வங்கத்தில்தான் மிக அதிகபட்சமாக 11 பெண் எம்பிக்கள் தேர்வாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 7 பெண் எம்பிக்கள் தேர்வாகி இருக்கின்றனர். சமூக நீதியின் தாய் மண்ணான தமிழ்நாட்டில் இருந்து கனிமொழி, தமிழச்சி தங்க பாண்டியன், ஜோதிமணி, ராணி ஶ்ரீகுமார், சுமதி ஆகிய 5 பெண் எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கனிமொழ், தமிழச்சி தங்க பாண்டியன், ஜோதிமணி ஆகியோர் 2-வது முறையாக லோக்சபா எம்பியாகி உள்ளனர். ராணி ஶ்ரீகுமார் (தென்காசி), சுமதி (மயிலாடுதுறை) முதல் முறை எம்பியாவர்.
கட்சிகளின் அடிப்படையில் பாஜக 31 பெண் எம்பிக்களை லோக்சபாவுக்கு அனுப்பி இருக்கிறது. காங்கிரஸ் கட்சி 13; திரிணாமுல் 11; சமாஜ்வாதி 5; திமுக 3; லோக் ஜனசக்தி- 2 ; ஜேடியூ 2. 7 அரசியல் கட்சிள் தலா 1 பெண் எம்பியை லோக்சபாவுக்கு அனுப்பி வைத்துள்ளன.
லோக்சபா தேர்தலில் மொத்தம் 8,360 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 10% பேர்தான் பெண்கள். ஆனால் 1952-ல் 3% பெண்கள்தான் போட்டியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications